திருப்பூர்,மார்ச்20: திருப்பூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இருப்பினும் வெயிலின் தாக்கத்திலிருந்து சற்று இளைப்பாறும் வகையில் கடந்த இரண்டு தினங்களாக திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை நேரத்தில் சாரல் மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் மாலை தொடங்கிய சாரல் மழை நள்ளிரவு வரை நீடித்தது. பின்னர் சாரல் மழையோடு பலத்த காற்றும் வீசியது. இதில் திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தது. திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஏராளமான மரங்கள் மக்களுக்கு நிழல் தரும் வகையில் இருந்த நிலையில் பலத்த காற்றின் பழமை வாய்ந்த மரங்கள் சில வேருடன் முறிந்து விழுந்தது. இதில் அரசு வாகனங்கள் நிறுத்தக்கூடிய பார்க்கிங் பகுதியின் மேற்கூரை தகரம் சேதமடைந்தது.
நல்வாய்ப்பாக வாகனங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதேபோல திருப்பூர் தென்னம்பாளையம் அருகே சூரியன் நகர் பகுதியில் 3 மாடி கொண்ட தனியார் நிறுவனத்தின் மேற் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை தகரம் பலத்த காற்றின் வேகத்தின் காரணமாக சரிந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்தது.
அங்கிருந்த 5 ஓட்டு வீடுகள் சேதமடைந்து தகர கூரைகள் விழுந்ததில் வீட்டிலிருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளது. இதில் 5க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படாத நிலையில் இந்த விபத்து குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
