×

கட்சி அடையாளங்களை மைதானத்திற்குள் கொண்டுவர வாய்ப்பு சேப்பாக்கத்தில் நடக்க உள்ள ஐபிஎல் போட்டிகளை தள்ளிவைக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தல்

சென்னை: சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றிவைக்கவும், அரசியல் கட்சிகளின் அடையாளங்களை மைதானத்துக்குள் கொண்டு செல்வதை தடுக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கும்ாறு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியை சேர்ந்த டி.பிரபாகரன் தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரில், வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு முன்பாகவே அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை தொடங்கிவிட்டன. தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அரசு நிர்வாகம் வந்துவிட்டாலும், அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்கு இரவு பகல் பாராமல் செயல்படும் காவல்துறையின் பங்கு முக்கியமானது.

மத்திய காவல் படைகள் நியமிக்கப்பட்டிருந்தாலும், வழக்கமான சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பு, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் என்ற வழக்கமான பணிகளுடன், தேர்தல் பிரசாரங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும், முக்கிய பங்கை மாநில காவல்துறை அளிக்க வேண்டியுள்ளது. தேர்தல் பிரசாரங்கள் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் ஏப்ரல் மாதத்தில் 4 மற்றும் 11ம் தேதிகளில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலந்துகொள்ளும் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், ஐபிஎல் போட்டிகளுக்கான பாதுகாப்பும், வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கான பாதுகாப்பையும் சென்னை மாநகர காவல் துறையினர் வழங்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பார்க்கப்படும் இந்த போட்டிகளில் தேர்தலில் போட்டியிடும் சில அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை உறுதி செய்வதற்காக அவர்களது ஆதரவாளர்களை மைதானத்திற்குள் களம் இறக்கி ஒன்று திரட்ட வாய்ப்புள்ளதால் மைதானத்திற்குள் மோதல்கள் ஏற்படக்கூடும்.

எனவே, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள இரு போட்டிகளை தேர்தல் முடிந்த பிறகு வேறு தேதிகளில் மாற்றி அமைப்பதற்கான தகுந்த அறிவுறுத்தல்களை போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு வழங்க வேண்டும். அந்த இரு போட்டிகளை திட்டமிடப்பட்ட தேதிகளில் நடத்த தேர்தல் ஆணையம் அனுமதிக்கும்பட்சத்தில், தேர்தல் நடத்தை விதிகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும். எந்தவொரு அரசியல் கட்சியின் சின்னம், இலச்சினை, கொடி, சுவரொட்டிகள் ஆகியவற்றை காட்சிப்படுத்தாமல் இருப்பதையும், வேறு ஒரு கட்சியையோ அல்லது வேட்பாளரையோ சுட்டிக்காட்டும் அல்லது குறிப்பிடும் எந்த பொருளையும் பொதுவெளியில் காட்சிப்படுத்தாமல் இருப்பதையும் உறுதி செய்யுமாறு ஐபிஎல் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியுள்ளார்.

Tags : IPL ,Chepauk ,Election Commission ,Chennai ,T. Prabhakaran ,Chepauk-Thiruvallikeni ,Election Commission… ,
× RELATED நீலகிரியில் பூத்துள்ள ஜெகரண்டா மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு