சென்னை: வறண்ட வானிலை காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரையில் நேற்று 101 டிகிரி வெயில் கொளுத்தியது. பிற இடங்களில் இயல்பை ஒட்டியே இருந்தது. இந்நிலையில், மன்னார் வளைகுடா முதல் தெற்கு உள் கர்நாடாக வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதேபோல உள் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய கேரள பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்துள்ளது. குறிப்பாக திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக தமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் நேற்று அதிகாலையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் அதிகபட்சமாக மேடவாக்கம், பள்ளிக் கரணை, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சென்னை, சத்யபாமா பல்கலைக் கழகம், கண்ணகி நகர், பகுதிகளில் 80மிமீ மழை பெய்துள்ளது. மேலும், தாம்பரம் அடையாறு 30மிமீ, அண்ணாபல்கலைக் கழகம், குன்றத்தூர், ஐஸ்அவுஸ், மடிப்பாக்கம் 20மிமீ, கொளப்பாக்கம், நுங்கம்பாக்கம், பேசின்பிரிட்ஜ், வளசரவாக்கம், சோழவரம், கத்திவாக்கம் பகுதிகளில் 10மிமீ மழை பெய்துள்ளது. இயைதடுத்து, 24ம் தேதி வரையில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
