×

தமிழக சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் தபால் வாக்கு அளிக்கலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் யார், யார் தபால் வாக்கு அளிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஊடகவியலாளர்களும் தபால் வாக்கு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், சேவை வாக்காளர்கள் மற்றும் தேர்தல் பணியில் உள்ள வாக்காளர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி,

1. அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் 6 மாநிலங்களில் இடைத்தேர்தல்களுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 15ம் தேதி அறிவித்தது. அட்டவணையின்படி மார்ச் 16ம் தேதி அன்று அசாம், கேரளா மற்றும் புதுச்சேரிக்கு தேர்தல் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டது. தமிழகத்திற்கு மார்ச் 30ம் தேதி அறிவிக்கப்படும்.

2. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் என அடையாளப்படுத்தப்பட்டவர்கள் தபால் வாக்கு மூலம் தங்கள் வாக்கை செலுத்தலாம்.

3. இத்தகைய வாக்காளர்கள் படிவம் 12D-ஐ பயன்படுத்தி, தேர்தல் அறிவிக்கை வெளியான 5 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் (பிஎல்ஓ) மூலம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் (ஆர்ஓ) சமர்ப்பிக்க வேண்டும்.
வாக்கு சேகரிக்கும் குழுக்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகளை சேகரிப்பார்கள். இதற்கான கால அட்டவணை தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தயாரிக்கப்பட்டு வேட்பாளர்களுக்கும் பகிரப்படும்.

4. தேர்தல் தேதியன்று அத்தியாவசிய பணிகளில் (Essential services) இருக்கும் வாக்காளர்கள், தங்கள் துறையின் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் (நோடல் ஆபீசர்) மூலம் தபால் வாக்கு வசதிக்கு விண்ணப்பிக்கலாம். தீயணைப்பு துறை, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, ஆம்புலன்ஸ் சேவைகள், விமான போக்குவரத்து, அரசு சாலை போக்குவரத்துக் கழகங்கள் போன்றவை இந்த வசதியின் கீழ் வருகின்றன.

5. தேர்தல் நாள் செய்தி சேகரிப்பிற்காக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களும் அத்தியாவசிய பணிகளில் உள்ள ‘வராத வாக்காளர்கள்’ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர், அவர்களும் தபால் வாக்கு வசதிக்கு தகுதியுடையவர்கள்.

6. தேர்தல் பணியில் இருக்கும் ஒரு வாக்காளர் தனது தபால் வாக்கை பெற்று, அதில் தனது வாக்கை பதிவு செய்து, வசதி மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வசதி மையத்தில் வாக்காளர் முழுமையான ரகசியத்துடன் வாக்களிப்பதை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

7. சேவை வாக்காளர்களுக்கு (Service voters) தபால் வாக்குகள் மின்னணு முறையில் அனுப்பப்படும். வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் இவை அனுப்பப்படும். இதற்கான தபால் செலவை சேவை வாக்காளர்கள் ஏற்க வேண்டியதில்லை.

8. பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் நாளான மே 4ம் தேதி காலை 8 மணிக்குள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களை சென்றடைய வேண்டும்.

9. தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மேற்கண்ட விதிகள் குறித்து அரசியல் கட்சிகள், போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விளக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Election Commission of India ,Chennai ,
× RELATED நீலகிரியில் பூத்துள்ள ஜெகரண்டா மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு