×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 104.7மி.மீ பதிவு: தேன்கனிக்கோட்டையில் கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை

 

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டையில் நேற்று இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை கொட்டியது. இதனால் வெப்பம் தணிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கினர். இதற்கிடையில் கர்நாடக மாநிலம் மேற்கு தொடர்ச்சி பகுதியில் கோடை மழை தொடங்கியுள்ளது. குடகு மாவட்டம், ஆசன், தளாவடி, உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த இரு தினங்களாக ஆலங்கட்டி மழை கொட்டியுள்ளது. சாலைகளில் ஆலங்கட்டி கொட்டியுள்ளதை சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் ஓட்டியுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தேன்கனிக்கோட்டை, தளி பகுதியில் கடந்த 2 நாட்களாக மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் தளி அருகே ஜவளகிரி பகுதியில் மழை பெய்தது. மாலை 6 மணியளவில் இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை கொட்டியது. ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆலங்கட்டி மழை பெய்ததால் சாலையில் ஐஸ்கட்டிகள் ஆறாக சிதறி கிடந்து ஓடியது. தெருக்கள், வீதிகளில், விவசாய நிலங்களில் ஆலங்கட்டி குவியல் குவியலாக குவிந்தன.

இதேபோல் மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): தேன்கனிக்கோட்டை 44, கிருஷ்ணகிரி 19.3, ராயக்கோட்டை 13, தளி 10, பெணுகொண்டாபுரம் 5.2 பாரூர் 4.8, கேஆர்பி டேம் 2.4, நெடுங்கல் 2, போச்சம்பள்ளி 2, ஊத்தங்கரை 2 என மொத்தம் 104.7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Tags : Krishnagiri district ,Thenkanikottai ,
× RELATED தமிழ்நாட்டில் நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிப்பு