சென்னையில் தங்கம் விலை கடும் சரிவு: ஒரே நாளில் ரூ.5,360 சரிந்து நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி

 

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.3,200 குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே உச்சத்தில் இருந்து வந்த தங்கம் விலை, தற்போது தொடர் இறங்குமுகமாகவே காணப்படுகிறது. நேற்றுவரை ஒரு சவரன் தங்கம் 640 ரூபாய் குறைந்து 1,16,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்றைய சந்தை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 270 ரூபாய் அதிரடியாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் 14,300 ரூபாயாக உள்ளது. எட்டு கிராம் கொண்ட ஒரு சவரன் தங்கம் ஒரே நாளில் 2,160 ரூபாய் சரிந்து, 1,14,400 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.3,200 குறைந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில் மேலும் ரூ.3,200 குறைந்து சவரன் ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது, தங்கம் ஒரே நாளில் ரூ.5,360 குறைந்து விற்பனையாகிறது. கடந்த ஒரு வார கால தங்கம் விலை நிலவரத்தை உற்று நோக்கினால், இந்த வீழ்ச்சியின் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருப்பது தெரியவரும். கடந்த 6 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 4,400 ரூபாய் வரை குறைந்திருந்தது.

அதோடு இன்றைய மாபெரும் வீழ்ச்சியான 2,160 ரூபாயையும் சேர்த்தால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 6,560 ரூபாய் என்ற அளவுக்கு மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. தொடர்ச்சியாகத் தங்கம் விலை குறைந்து வருவது சந்தையில் பெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. ஒரு கிராம் கணக்கில் பார்த்தால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் கிராமுக்கு 820 ரூபாய் வரை குறைந்துள்ளது. தங்கத்தைப் போலவே ஏழை, எளிய மக்களின் முதலீடாகப் பார்க்கப்படும் வெள்ளியின் விலையிலும் இன்று கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஒரு கிலோ வெள்ளி 5,000 ரூபாய் குறைந்து 2,75,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று மேலும் பன்மடங்கு சரிந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 ரூபாய் குறைந்து, 265 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, மொத்த வியாபாரத்தில் ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ஒரே நாளில் 10,000 ரூபாய் குறைந்து, 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

எதிர்வரும் திருமண சீசன் மற்றும் சுபமுகூர்த்த தினங்களை முன்னிட்டு நகை வாங்கத் திட்டமிட்டிருந்தவர்களுக்கு, தங்கம் மற்றும் வெள்ளியின் இந்தத் தொடர் விலை வீழ்ச்சி மிகப்பெரிய நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. விலை தொடர்ந்து குறைந்து வருவதால், மக்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இனி வரும் நாட்களிலும் இந்த விலை குறைவு நீடிக்குமா என்பதைப் பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Related Stories: