×

ஒன்றிய அமைச்சரின் துறை ஆட்களால் சிலிண்டர் வினியோகத்தில் செயற்கை தட்டுப்பாடு: சபாநாயகர் மு.அப்பாவு பேட்டி

 

 

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் நேற்றிரவு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து சபாநாயகர் மு.அப்பாவு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் வணிக ரீதியிலான சிலிண்டர்கள் விற்பனைக்கு கிடைக்காததால் எத்தனையோ ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இதுபற்றிய அனைத்து செய்திகளையும் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பத்திரிகைகளில் படித்து முழுமையாக அறிந்து கொள்ளாமல் பேசுவது சரியல்ல.

உலகமெங்கிலும் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவை ஒரே மூலப்பொருளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இவை அனைத்தும் தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை என திமுகவினர் செயற்கை வதந்தியை உருவாக்கி வருவதாக ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார். எனினும், பெட்ரோலிய பொருட்கள் அனைத்தும் ஒன்றிய இணையமைச்சரின் நிர்வாகத்தில் உள்ள பெட்ரோலியத் துறையிடம்தான் உள்ளது. இதற்கான டீலர்கள் அனைவருமே அவர்களின் ஆட்கள்தான். அவர்கள் மூலமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகத்தில் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, அதன்மூலம் அவற்றின் விலையை அதிகரித்து விற்பனைக்கு கொண்டுவர திட்டமிடுகின்றனர். தமிழ்நாட்டில் அதிகளவு அறிவுள்ளவர்கள் உள்ளனர்.

இங்கு அனைத்து மக்களும் ஏன், எதற்கு, எப்படி என்று சரமாரி கேள்வி எழுப்புவதால், இங்கு கொள்ளையடிக்க முடியாது. ஏனெனில், தமிழ்நாட்டில் அந்தளவுக்கு நல்லாட்சி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறும் ஒன்றிய இணையமைச்சர், முதலில் மணிப்பூர் மாநிலத்துக்கு சென்று பார்க்கட்டும். அங்கு போலீஸ் வேனில் சென்ற பெண்ணுக்கு என்ன நிலை ஏற்பட்டது என்பதை ஒன்றிய இணையமைச்சர் நேரில் பார்த்துவிட்டு, இங்கு வந்து தமிழ்நாட்டை பற்றி பேசட்டும் என்று சபாநாயகர் மு.அப்பாவு தெரிவித்தார்.

Tags : Union Minister ,Speaker ,M. Appavu ,Meenambakkam ,Chennai airport ,Bangalore ,Karnataka ,
× RELATED தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள்...