×

ஜனநாயகன் படத்துக்கு மீண்டும் சிக்கல்; தேர்தல் ஆணையம்தான் பட ரிலீசை முடிவு செய்யும்: சென்சார் போர்டு அதிரடி

 

 

சென்னை: விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ ரிலீசை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் என சென்சார் போர்டு கைவிரித்துள்ளது. விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம், ‘ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ்ராஜ் எனப் பலரும் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தாண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டனர். விஜயின் கடைசிப் படம் எனக்கூறி படத்துக்கு விளம்பரம் செய்யப்பட்டது.

இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்த தணிக்கை வாரியம், சில மாற்றங்களைக் கூறியது. அதனை படக்குழு செய்த பின்னரும் சான்றிதழ் தருவதில் தாமதம் ஏற்பட, நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் வழக்கு தொடுத்தது. அதனை எதிர்த்து தணிக்கை வாரிய தரப்பும் நீதிமன்றத்தில் வாதிட்டது. கடைசியாக படக்குழு தங்கள் வழக்கை வாபஸ் பெற்று, படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்ப ஒப்புக் கொண்டது. அதன்படி, ரிவைசிங் கமிட்டி மார்ச் 9ம் தேதி படத்தைப் பார்ப்பதாக இருந்தது. ஆனால், மறு ஆய்வு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. கமிட்டி உறுப்பினர்களில் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதுதான் இதற்குக் காரணம் என சொல்லப்பட்டது.

இதனால் தள்ளிப்போன மறு ஆய்வு மார்ச் 17ம் தேதி நடக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் நேற்றும் படத்தை சென்சார் போர்டு பார்க்கவில்லை. இன்று காலை இப்படத்தின் மறு ஆய்வு மும்பையில் நடைபெற்றகாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த தணிக்கை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் படத்தை மறு ஆய்வு செய்துள்ளனர். சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளனவா என மறு ஆய்வின்போது சரிபார்க்கப்பட்டுள்ளது. இப்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. `ஜனநாயகன்’ படத்திலும் தேர்தல் சம்பந்தமான காட்சிகளும், அரசியல் வசனங்களும் இடம்பெற்றுள்ளது.

மேலும் விஜய்யும் அரசியலில் இயங்கி வருகிறார். எனவே இனி ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கும் என்று சென்சார் போர்டு தெரிவித்துள்ளது. ‘ஜனநாயகன்’ படத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்வையிட சென்சார் போர்டு பரிந்துரை செய்துள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ‘ஜனநாயகன்’ படக்குழு கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

Tags : Election Commission ,Censor Board ,Chennai ,Vijay ,H. Vinoth ,Pooja Hegde ,Mamita Baiju ,Priyamani ,Prakashraj ,
× RELATED தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள்...