- சிபிஐ
- வி.செந்தில் பாலாஜி
- சென்னை விமான நிலையம்
- Meenambakkam
- முன்னாள் அமைச்சர்
- புது தில்லி
- தில்லி
- கரூர்...
மீனம்பாக்கம்: புதுடெல்லியில் சிபிஐ விசாரணையில் ஆஜராகிவிட்டு நேற்றிரவு சென்னை விமானநிலையம் வந்த முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, டெல்லியில் சிபிஐ விசாரணையின்போது நடந்தது என்ன என்பது குறித்து பேட்டியளித்தார். கரூரில் தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து, சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணையில் ஆஜராகிவிட்டு, பயணிகள் விமானத்தில் நேற்றிரவு 10.30 மணியளவில் கரூர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி சென்னைக்குத் திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு வி.செந்தில்பாலாஜி அளித்த பேட்டி: கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடந்த துயரச் சம்பவம் குறித்து, டெல்லியில் நடைபெற்ற சிபிஐ விசாரணையில் என்னிடம் சில கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு நான் முறையான பதிலை வழங்கி இருக்கிறேன். குறிப்பாக, அன்று நடைபெற்ற சம்பவம் குறித்து சில கேள்விகளை சாட்சிகளின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் முன்வைத்தனர். அந்தக் கேள்விகள் என்ன, அதற்கான எனது பதில்கள் என்ன என்பது குறித்து பொதுவெளியில் கூறுவது சரியாக இருக்காது. சிபிஐ விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்தும் இங்கு கூறமுடியாது.
எனினும், சிபிஐ அதிகாரிகளின் முறையான கேள்விகளுக்கு, நான் முறையான பதில்களை அளித்திருக்கிறேன். அங்கு நான் காலை 10 அல்லது 10.30 மணிக்கு இருக்க வேண்டும் என்று அறிவித்திருந்தனர். எனினும், நான் காலை 10.15 மணிக்கே சென்றுவிட்டேன். மாலை 5 மணிக்கு விசாரணை நிறைவு பெற்றது. அவர்களின் கேள்வி எண்ணிக்கை எவ்வளவு என்று நான் பார்க்கவில்லை. விசாரணை ஆணையத்தில் எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டது, அதற்கான பதில்கள் என்ன கூறினேன் என்பதை நான் வெளியே வந்து கூறுவது சரியாக இருக்காது. டெல்லிக்கு அழைத்து அழுத்தம் கொடுத்ததாக நான் பார்க்கவில்லை. அச்சம்பவம் குறித்து அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்திருக்கலாம்.
நான் சம்பவ இடத்தில், களத்தில் இருந்து பணியாற்றியதால், அவர்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும், நான் முறையான பதில்களை வழங்கி இருக்கிறேன். என்னை மீண்டும் விசாரணைக்கு அழைப்பார்களா என்பது குறித்து இதுவரை எதுவும் கூறவில்லை. இப்போது தேர்தல் நேரம். எங்களைப் பொறுத்தவரை, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததுமே, நாங்கள் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளைத் துவங்கிவிட்டோம். இளைஞரணி, மகளிரணி, பூத் கமிட்டி, திருச்சி மாநாடு என்று கட்சிப் பணிகளில் வேகமாக ஈடுபட்டு கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு இப்போது சட்டமன்ற தேர்தல் மட்டுமே குறிக்கோள்.
எனவே, இந்நேரத்தில் மற்றவர்களைப் பற்றியோ, மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது பற்றியோ நாங்கள் சிந்திப்பதற்கு அவசியம் இல்லை. தேர்தல் களத்தில், எங்களுக்கு மக்கள் வாக்களிக்க தயாராக இருக்கின்றனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக 2வது முறையாக ஆட்சிக்கு வர தயாராக இருக்கிறது. அதை நோக்கித்தான் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். இவ்வாறு வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
