தை அமாவாசையொட்டி மூதாதையர்களுக்கு தர்ப்பணம்

கோவில்பட்டி, பிப். 12:  தை அமாவாசையையொட்டி கோவில்பட்டி கோயில் தெப்பக்குளத்தில் பொதுமக்கள் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வந்து எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்தனர். தை அமாவாசை தினத்தில் நீர்நிலைகளில் புனித நீராடி மறைந்த தங்களது முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் அவர்களது ஆத்மா சாந்தியடைந்து குடும்பம் சுபிட்சம் அடையும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லியம்மன் பூவனநாதசுவாமி கோவில் அகத்தியாரால் பூஜிக்கப்பட்ட ஆலயங்களில் ஒன்றாகும். தை அமாவாசையையொட்டி நேற்று இந்த கோயில் தெப்பக்குளத்தில் போதிய நீர் இல்லாததால் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் பாட்டில்களில் தண்ணீரை கொண்டு வந்து எள்ளும், தண்ணீரும் இறைத்து தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். திருச்செந்தூர்: தை அமாவாசையையொட்டி ஏராளமானோர் அதிகாலை முதலே திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்தனர்.

பின்னர் கடலில் புனித நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். குளத்தூர்: குளத்தூர், விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர், எட்டயபுரம் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக குளத்தூரையடுத்த சிப்பிகுளம் கடல்கரையில் அதிகாலை 3மணி முதலே குவிந்தனர். கடலில் புனிதநீராடி பூஜைகள் செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

தொடர்ந்து அருகிலுள்ள வைப்பாறு காசிவிஸ்வநாதர் கோயில், அரசமரத்து விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். எஸ்ஐ கங்கைநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

Related Stories: