×

பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு

 

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. பாமகவின் பெயர், சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தன்னையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என்ற தங்கள் தரப்பு கோரிக்கையை உரிமையியல் நீதிமன்றம் விசாரணை எடுக்காததால், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனின் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதனிடையே இந்த தடையை நீக்க கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது; அன்புமணி தரப்பில், கட்சியின் தலைவராக அன்புமணியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளதாகவும், மாம்பழம் சின்னத்தை கட்சிக்கு ஒதுக்கீடு செய்து அன்புமணிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

ஏப்ரல் 9ஆம் தேதி தேர்தலை சந்திக்க உள்ள புதுச்சேரி மாநிலத்தில் இன்று இரண்டு வேட்பாளர்கள் தாக்கல் செய்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிய பிறகு நீதிமன்றம் தலையிடக் கூடாது. அதனால் இந்த வழக்குகளை தேர்தலுக்குப் பிறகு தள்ளி வைக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. அப்போது குறிப்பிட்ட நீதிபதி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், உரிமையியல் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? அவசரமாக வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன? ராமதாஸ் எப்படி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்? தேர்தல் நடத்தப்பட்டதா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு ராமதாஸ் தரப்பில், பிரதான வழக்கில் தன்னை இணைக்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம். இது உள்கட்சி பிரச்சினை. அதற்கும் தேர்தல் நடைமுறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. வழக்கை தொடர்ந்து விசாரிக்க உரிமையியல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்குகளில் இப்போது எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அது தேர்தல் நடைமுறைக்கு இடையூறாகிவிடும். நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையை மே 10க்கு பின் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags : Chennai High Court ,PMK ,Ramadoss ,Chennai ,Chennai Civil Court ,Anbumani ,PMK… ,
× RELATED கோவையில் வணிக கியாஸ் சிலிண்டர்களை...