×

பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; மம்தாவின் 2 கோட்டையில் சுவேந்து போட்டி: மேற்குவங்கத்தில் பரபரப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து அவரது சொந்த தொகுதியிலேயே போட்டியிட சுவேந்து அதிகாரிக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், நந்திகிராமம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிட்டார். அந்த தேர்தலில், மம்தா பானர்ஜியை 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சுவேந்து அதிகாரி வெற்றியைப் பதிவு செய்தார். தொடர்ந்து அவர் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரானார்.

இந்நிலையில், வரும் ஏப்ரல் 23 மற்றும் 29ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலுக்கான பாஜகவின் 144 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில், சினிமா பிரபலங்கள் தவிர்க்கப்பட்டு நீண்டகாலமாக கட்சியில் பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலருக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மாநில தலைவர் சுவேந்து அதிகாரி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

கடந்த முறை மம்தா பானர்ஜியை வீழ்த்திய நந்திகிராமம் தொகுதியிலும், மம்தாவின் கோட்டையாகக் கருதப்படும் தெற்கு கொல்கத்தாவின் பவானிப்பூர் தொகுதியிலும் அவர் களம் இறங்குகிறார். முதல்வர் மம்தாவை அவரது சொந்த தொகுதியிலேயே முடக்கும் நோக்கில் இந்த அதிரடி முடிவை பாஜக எடுத்துள்ளது. தற்போது பவானிப்பூர் வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 47,000 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தலை நியாயமான முறையில் நடத்த கொல்கத்தா போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது. ஒருவேளை பவானிப்பூரில் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றால், அது திரிணாமுல் காங்கிரசுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் எனக் கருதப்படுகிறது.

Tags : BJP ,Sweden ,2nd Fort of Mamta ,Kolkata ,Chief Minister ,Mamta Banerjee ,West Bengal Assembly ,West Bengal ,Trinamul Congress ,Nandigraram ,
× RELATED நடிகை நயன்தாரா குறித்து சி.வி....