×

சிபிஐ விசாரணைக்கு சென்று வந்த நிலையில் தவெக நிர்வாகிகளுடன் விஜய் தீவிர ஆலோசனை

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கு தயாராகும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று மாலை சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. இதில், என்.ஆனந்த், செங்கோட்டையன், சி.டி.ஆர்.நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நேற்று காலை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் என்.ஆனந்த் தலைமையில் நடந்தது. மொத்தமுள்ள 30 தொகுதிகளிலும் தவெக தனித்துப்போட்டியிட போவதாக கூறப்படுகிறது. இதனால், 30 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, பட்டியல் விஜய்யிடம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் கூட்டத்தில், தேர்தலுக்கு எவ்வாறு தயாராவது, எங்கெல்லாம் பரப்புரையில் ஈடுபடலாம், தேர்தல் அறிக்கை, தேர்தலுக்கான செயல்திட்டம் உள்ளிட்ட தேர்தல் பணிகள் குறித்து விஜய் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

விஜய் ஆலோசனை நடத்திய அலுவலகத்தில் தான் தவெகவின் அரசியல் திட்டங்களை வகுக்கும் வாய்ஸ் ஆப் காமன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பெரும்பாலும் இந்த நிறுவனத்தால்தான் விஜய் மற்றும் தவெகவின் செயல்பாடுகள் தொடர்பான திட்டங்கள் வகுக்கப்படுகிறது. குறிப்பாக, தவெகவின் வார்ரூமாக அந்த அலுவலகம் செயல்படுகிறது. வழக்கமாக விஜய் முக்கிய நிர்வாகிகளுடன் பட்டினப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் தான் ஆலோசனை மேற்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நேற்று முன்தினம் டெல்லியில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜரான நிலையில் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

* எல்லாமே பொய்… யாருகிட்டயும் கூட்டணி பேசல…

தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை: சமீபகாலமாக அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜ, அதிமுக, மற்றும் சசிகலா, ராமதாசை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்திக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை. குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்.

இதேபோன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் பரப்பப்படுகின்றன. பொறுப்புள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Vijay ,TVP ,CBI ,Tamil Nadu and ,Puducherry ,assembly elections ,Tamil Nadu Victory Party ,Teynampet, Chennai ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சுந்தர், வருண் வாழ்த்து