×

தந்தை, மகன் பிரச்னையை வைத்து விசாரிக்க முடியாது கட்சி தொடர்பான வழக்கை மட்டுமே விசாரிக்க முடியும்: ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கருத்து

சென்னை: பாமகவில் தந்தை, மகன் இடையிலான பிரச்னையை வைத்து வழக்கை விசாரிக்க முடியாது, பாமக கட்சியை மட்டுமே வைத்து வழக்கை விசாரிக்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாமகவின் பெயர், சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தன்னையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என்ற தங்கள் தரப்பு கோரிக்கையை உரிமையியல் நீதிமன்றம் விசாரணை எடுக்காததால், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனின் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதனிடையே இந்த தடையை நீக்க கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பாமக பொதுசெயலாளர் வடிவேல் ராவணன் தரப்பில், பாமக கட்சி தலைவர் எனக்கூறி ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளதால் பொதுச்செயலாளர் என்ற முறையில் தன்னை வழக்கில் இணைத்து வழக்கை விசாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இனி இந்த வழக்கில் என்ன செய்ய போகிறீர்கள்? என்று அன்புமணி மற்றும் ராமதாஸ் தரப்பிற்கு கேள்வி எழுப்பினார். மேலும் தந்தை, மகனுக்கு இடையிலான பிரச்னை எப்போது வேண்டுமானாலும் சரியாகலாம். அதனால் அவர்களுக்கு இடையேயான பிரச்னையை வைத்து இந்த வழக்கில் முடிவெடுக்க முடியாது. கட்சியை வைத்து மட்டுமே வழக்கை விசாரிக்க முடியும். அந்த வகையில் பாமக பொதுசெயலாளர் வடிவேல் ராவணனை வழக்கில் சேர்க்க என்ன பிரச்னை உள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது, அன்புமணி தரப்பில், கட்சி தொடர்பாக சில ஆவணங்களை ராமதாஸ் தரப்பு வழங்க கோரி தாக்கல் செய்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதற்கு அனுமதியளித்த நீதிபதி, ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடரும், ராமதாஸ், அன்புமணி, வடிவேல் ராவணன் ஆகியோர் தரப்பில் வாதங்களை வைப்பதற்காக வழக்கு விசாரணையை நாளைக்கு (இன்று) தள்ளி வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Tags : Ramadoss ,Chennai ,PMK ,Anbumani ,PMK… ,
× RELATED மதுபான கொள்கை வழக்கில் திருப்பம்;...