சென்னை: புதிதாக அமைக்கப்படும் டெர்மினல் 3 மற்றும் பேஸ் 2 விரிவாக்கப் பணிகள் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 40 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்படும் டெர்மினல் 3 கட்டுமான பணிகள் மற்றும் பேஸ் 2 விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. அதில், தற்போது மிகப்பெரிய இரும்பு தூண்கள் அமைக்கப்படும் பணிகள் நடக்கிறது. எனவே பயணிகள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பு கருதி, போக்குவரத்து மாற்றங்களை இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை விமான நிலையம் டெர்மினல் 4, அருகே தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன. டெர்மினல் 4 அருகே உள்ள வாகனங்கள் உள்ளே வருவதற்கான டோல்கேட் மூடப்படுகிறது. எனவே தாம்பரம் பகுதியில் இருந்து விமான நிலையத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஜிஎஸ்டி சாலை சர்வீஸ் சாலையை பயன்படுத்தி, டெர்மினல் 2, நுழைவாயில் டோல்கேட் வழியாக விமான நிலையத்திற்குள் வரலாம். அதேபோல், டெர்மினல் 4, புறப்பாடு பகுதியில் இருந்து வெளியேறும் வாகனங்கள், ஒரே ஒரு டோல் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு, டிராபிக் மார்ஷல்கள் பணியில் இருப்பார்கள். டெர்மினல் 1, டெர்மினல் 2, வழியாக பயணிக்கும் பயணிகளுக்கு எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் வழக்கமான வழிகளை பயன்படுத்தலாம்.
பயணிகள் வசதிக்காக டெர்மினல் 1, டெர்மினல் 2 இடையே இயக்கப்படும் பேட்டரி வாகனங்கள் வழக்கம் போல் இயங்கும். ஆனால் டெர்மினல் 1, டெர்மினல் 4 இடையே இயக்கப்படும் பேட்டரி வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும். பயணிகள் வசதிக்காக, டெர்மினல் 1, டெர்மினல் 4 இடையிலான வாக்கலேட்டர், வசதிகள் வழக்கம்போல் இயங்கும். இந்த ஏற்பாடுகள் அனைத்தும் மார்ச் 16ம்தேதி (நேற்று) முதல் வரும் ஏப்ரல் மாதம் 24ம்தேதி வரை, 40 நாள்கள் அமலில் இருக்கும் என இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
