×

சமையல் காஸ் தட்டுப்பாடு பிரச்னை விஸ்வரூபம் நாடு முழுவதும் ஓட்டல்கள் முடங்கின: உணவுப்பொருட்கள் விலை இரண்டு மடங்கு உயர்வு

புதுடெல்லி: சமையல் காஸ் தட்டுப்பாடு பிரச்னை அதிகரித்துள்ளதால் நாடு முழுவதும் ஓட்டல்களின் செயல்பாடுகள் முடங்கி விட்டன. பல ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. ஈரான் போர் காரணமாக இந்தியாவில் சமையல் காஸ் சப்ளை தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக வர்த்தக சிலிண்டர் சப்ளை முடங்கி உள்ளது. இதனால் ஓட்டல்கள், தொழில்நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள உணவகங்கள் தங்கள் மெனுவைக் குறைத்து விட்டன. மேலும் உணவுப்பொருட்கள் விலைகளை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் பல உணவு நிறுவனங்கள் சமையல் காஸ் நெருக்கடியைச் சமாளிக்க நிலக்கரிக்கு மாறிவிட்டன.

டெல்லி: டெல்லியில், பெரிய நிறுவனங்களில் கூட்டங்களும் குழு விருந்துகளும் இப்போது நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் அங்குள்ள உணவகங்களில் மெனுக்கள் குறைக்கப்பட்டுவிட்டன. முன்பதிவுகளையும் கூட குறைத்துள்ளன. டெல்லியில் மிகவும் பரபரப்பான உணவு மையங்களில் ஒன்றான கன்னாட் பிளேஸில் உள்ள உணவக உரிமையாளர்கள், பெரிய விருந்து முன்பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி, வழக்கமான உணவு சப்ளையில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளன.

கர்நாடகா: வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 316 வீட்டு எல்பிஜி சிலிண்டர்களை கர்நாடக உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறை பறிமுதல் செய்தது. கோலார் மாவட்டம், கே.ஜி.எப்-ல் உள்ள ஒரு எரிவாயு ஏஜென்சி கடை மீது, சட்டவிரோதமாக எரிவாயு சிலிண்டர்களை நிரப்பி வந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தின் உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறை சார்பில் 1,483 இடங்களில் சோதனைகளை நடத்தி, சமையல் எரிவாயுவின் கள்ளச் சந்தைப்படுத்தலைத் தடுக்கும் நடவடிக்கையில் 6 பேரைக் கைது செய்தது. மேலும் 24 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்குவங்கம்: மேற்கு வங்கத்தின் பல மாவட்டங்களிலும் உள்ள சமையல் காஸ் விநியோக மையங்கள் எரிவாயு நிறுவனங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் சமையல் காஸ் சிலிண்டருடன் காத்து இருந்தனர். மேலும் அதிகாரிகள் 28 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். பல உணவகங்களில் மெனுவில் உணவு வகைகள் குறைக்கப்பட்டன. பல உணவகங்கள் விறகு மற்றும் நிலக்கரிக்கு மாறி விட்டன.

மத்தியபிரதேசம்: மபி மாநிலத்திலும் சமையல் காஸ் தட்டுபாடு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அதை முறைப்படுத்தவில்லை என்றால் சில நாட்களில் மாநிலம் முழுவதும் ஓட்டல்களை மூட வேண்டியது வரும் என்று வர்த்தகர்கள் அமைப்பு எச்சரித்தது.

கேரளாவில், ரம்ஜான் நெருங்கி வருவதாலும், மேற்கு வங்கம் மற்றும் அசாமில் தேர்தல்கள் நெருங்குவதாலும், எரிவாயு பற்றாக்குறை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு வெளியேறத் தூண்டியுள்ளது.

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் சமையல் காஸ் சிலிண்டர் கிடைக்காததால் நிலக்கரிக்கான தேவை திடீரென அதிகரித்துள்ளது. பல தாபாக்களும் சிறிய உணவகங்களும் மீண்டும் பாரம்பரியமான, நிலக்கரியால் எரியும் அடுப்புகளுக்கு மாறி உள்ளன. மேலும் உணவுப்பொருட்களில் விலையும் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

Tags : New Delhi ,India ,Iran war ,
× RELATED கொல்கத்தாவில் பிரதமர் மோடி பேச்சு...