புதுடெல்லி: கடந்த 2019ம் ஆண்டு திருநங்கையர் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் திருநங்கையருக்கான வரையறை மற்றும் சுய அடையாள அங்கீகாரம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. எனினும், இந்தச் சட்டத்தின் நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து, நலத்திட்டங்கள் தகுதியானவர்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று மக்களவையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார், திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் திருநங்கையர் என்பதற்கான வரையறை சுருக்கப்பட்டு, உயிரியல் மற்றும் சமூக கலாசார ரீதியிலான கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறிப்பாக கின்னார், ஹிஜ்ரா, அரவாணி மற்றும் ஜோக்தா போன்ற பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சுய விருப்பத்தின் அடிப்படையில் பாலின அடையாளத்தைத் தீர்மானிக்கும் முறையை நீக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. இனிமேல் மாவட்ட ஆட்சியரிடம் அடையாளச் சான்று கோரி விண்ணப்பிக்கும்போது, தலைமை மருத்துவ அதிகாரி தலைமையிலான மருத்துவக் குழுவின் பரிந்துரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளைக் கடத்தி (சிறார்கள்) கட்டாயமாகத் திருநங்கையாக மாற்றும் குற்றங்களுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதத்துடன் கூடிய ஆயுள் தண்டனை வழங்கவும், திருநங்கையர் தேசிய கவுன்சில் உறுப்பினர்களைச் சுழற்சி முறையில் நியமிக்கவும் புதிய மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
