புதுடெல்லி: “செயற்கை நுண்ணறிவு வழக்கறிஞரின் மனதையோ, நீதிபதியின் தீர்ப்பையோ மாற்ற முடியாது” என உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தெரிவித்துள்ளார். தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நேற்று நடந்த மாநாட்டில் உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய விக்ரம் நாத், “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒரு குறிப்பை தருவதற்கு மட்டுமே உதவக்கூடும். ஆனால் சட்டத்தை தானே உருவாக்கி கொள்ள அதற்கு அனுமதி அளிக்க முடியாது. அதேசமயம், செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாடு, நீதித்துறை அமைப்பானது, அதனுடன் தொடர்பு கொள்வதையை முற்றிலுமாக மறுப்பது என்ற எதிர்முனைக்கு எடுத்து சென்று விடவும் கூடாது.
செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட தவறான மேற்கோள்கள் வெறும் தொழில்நுட்ப பிழைகள் மட்டுமல்ல, அவை சட்டரீதியான வாதங்களின் நேர்மையையும், நீதி வழங்கும் செயல்முறையின் நம்பகத்தன்மையையும் அடியோடு பாதிக்கின்றன. செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு கருவி மட்டுமே. அதை கருவியாகத்தான் பயன்படுத்த முடியும். ஆனால், வழக்கறிஞர் ஒருவரின் பயிற்சி பெற்ற மனதையோ, நீதிமன்ற அதிகாரிகளின் நெறிமுறை பொறுப்புகளையோ, நீதிபதியின் நேர்மையான, ஒழுக்கமான தீர்ப்பையோ மாற்ற முடியாது.
இந்த கருவியை எவ்வாறு திறமையாகவும், கவனமாகவும், கருவிகளின் வரம்புகள் பற்றிய முழு விழிப்புணர்வுடனும் பயன்படுத்துவது என்பதை நாம் கற்று கொள்ள வேண்டும். இந்த கருவியை புத்திசாலித்தனமாக பயன்படுத்தினால், நேரத்தை மிச்சப்படுத்தலாம். நீதித்துறையின் எதிர்காலம், நடைமுறைகளை வெறுமனே கணினி மயமாக்குவதன் மூலம் மட்டும் பாதுகாக்கப்பட்டு விடாது. மாறாக, தொழில்நுட்பமானது சட்ட அமைப்பின் அடிப்படை லட்சியங்களுடன் உறுதியாக பிணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வதன் மூலமே நீதித்துறையின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்” என்று இவ்வாறு கூறினார்.
