- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர்
- எம் சுப்பிரமணியன்
- சென்னை
- மருத்துவப் பணியாளர் தேர்வு ஆணையம்
- TNPSC
- தேசிய சுகாதார ஆணையம்
சென்னை: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் 13,093 பேருக்கும், டிஎன்பிஎஸ்சி மற்றும் தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்ககத்தில், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,071 உதவி மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திமுக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களுக்கு பணிநியமன ஆணைகள் படிப்படியாக வழங்கப்பட்டுள்ளன. தற்போது காலிப்பணியிடங்கள் இல்லாத துறை என்கின்ற வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இருக்கிறது. கடந்த நவம்பர் 21ம் தேதி 1,100 உதவி மருத்துவர்களுக்கு பணியிடங்கள் நிரப்புவதற்குரிய அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அதற்கான தேர்வு கடந்த ஜனவரி 25ம் தேதி நடைபெற்றது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 25,172 பேர். தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 20,867 பேர். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 16,968 பேர்.
தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, இனசுழற்சி முறை என்று தேர்வு செய்யப்பட்டு இறுதியாக தேர்வு செய்யப்பட்டவர்கள் 1,071 பேர். 1,071 பேருக்கான இறுதிப் பட்டியல் நேற்று முன்தினம் இணையதளம் வாயிலாக வெளியிடப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இன்று (நேற்று) கலந்தாய்வு நடத்தி அவரவர் விரும்பும் இடங்களுக்கே சென்று பணி ஆணைகள் தரும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் 13,093 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தேசிய நலவாழ்வு குழுமம் போன்ற பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஒட்டுமொத்தமாக இந்த 5 ஆண்டுகளில் பணியில் நியமிக்கப்பட்ட புதிய பணியாளர்களின் எண்ணிக்கை 48,418 பேர் ஆகும். 17,780 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
* அரசு மருத்துவமனைகளில் காஸ் தட்டுப்பாடு இல்லை
சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக, மக்கள் நல்வாழ்வு துறையின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. எரிவாயுவுக்கு மாற்றாக எலக்ட்ரிக் ஸ்டவ், விறகு அடுப்பு போன்ற அடுப்புகளை பயன்படுத்தி மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ பயனாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாத வகையில் உணவு வழங்கப்பட வேண்டும் தொடர்ந்து அனைத்துக் கல்லூரி முதல்வர்களுடன் பேசி வருகிறேன். எங்கேயும் எந்தவிதமாக பாதிப்புகள் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் சமையல் எரிவாயு தரப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்தவிதமாக பதற்றமும் இல்லாமல் மருத்துவ பயனாளர்களுக்கு உணவுகள் நல்ல முறையில் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் எந்தவிதமான உணவு தட்டுப்பாடு பிரச்சினை ஏற்படவில்லை என்று அமைச்சர் கூறினார்.
