- Wickramaraja
- சென்னை
- தமிழ்நாடு வர்த்தகர்கள் சங்கம்
- ஜனாதிபதி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தலைமை தேர்தல் ஆணையர்
- அர்ச்சனா பட்நாயக்
- சென்னை செயலகம்
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, தேர்தல் நேரங்களில் வியாபாரிகள் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்கள் குறித்து கோரிக்கை மனு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் நேரத்தில் ரூ.50,000 வரை ரொக்கம் கொண்டு செல்லலாம் என்ற வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். முறையான பில் மற்றும் ஆவணங்களுடன் கொண்டு செல்லப்படும் பொருட்கள் அல்லது வங்கிக்கு செலுத்தக் கொண்டு செல்லும் பணத்தை சரிபார்த்து உடனே ஒப்படைக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மீட்டெடுக்க ஒரே ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும்.
வியாபாரிகள் மத்தியில் தேர்தல் குறித்த அச்சத்தை போக்கி, அவர்கள் அமைதியாக தொழில் செய்யவும், வாக்களிக்கவும் உரிய சூழலை உருவாக்க வேண்டும். 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி அனைத்து சூப்பர் மார்க்கெட் பில்கள், பைகள் மற்றும் விளம்பர தட்டுகளில் விழிப்புணர்வு வாசகங்களை அச்சிட தயாராகி வருகிறோம். வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மற்றும் பொதுமக்களுக்கான விற்பனை விலையில் உள்ள குளறுபடிகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம். சில இடங்களில் ஓட்டல்களில் உணவு வகைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கலாம், ஆனால் இட்லி, சாதம் போன்ற அடிப்படை உணவுகள் தட்டுப்பாடின்றி கிடைக்கும். தேர்தல் என்றாலே வியாபாரிகளுக்கு ஒருவித அச்சம் ஏற்படுகிறது. அதை நீக்கி, அவர்கள் நிம்மதியாக தொழில் செய்ய வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
