மதுரை, மார்ச் 12:அரசுப்பள்ளி மாணவர்கள் ஜேஇஇ, நீட், கிளாட், கியூட் போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று உயர்கல்வி கற்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் வெற்றிப்பள்ளிகள் திட்டத்தில் ஒன்றியம் தோறும் போட்டித்தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வாரந்தோறும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இதுவரை சாத்தியமான இந்த வாய்ப்புகள், இப்பயிற்சி மையங்கள் மூலம் தற்போது அரசுப்பள்ளி மாணவர்களும் கிடைப்பதால், அவர்கள் ஜேஇஇ, நீட், கிளாட், கியூட் தேர்வுகளில் வென்று சாதனை படைத்து வருகின்றனர்.இதன்படி மதுரை மாவட்டத்தில் தற்போது 11 பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் போட்டித்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக சமீபத்தில் இத்திட்டத்தில் பயிற்சி பெற்ற 5 மாணவ, மாணவிகள் ஜேஇஇ முதன்மை தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர். இதையடுத்து இத்திட்டத்தில் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மாணவர்களின் வசதிக்காகவும் மாவட்டத்தில் கூடுதலாக 8 இடங்களில் பயிற்சி மையங்கள் அமைக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி சேடபட்டி, டி.கல்லுப்பட்டி, வாடிப்பட்டி, கொட்டாம்பட்டி, உள்ளிட்ட 8 இடங்களில் பயிற்சி மையம் விரைவில் அமையவுள்ளது. இது அப்பகுதி மாணவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்பதால், தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
