×

கொசஸ்தலை தடுப்பணையில் மெகா சைஸ் பள்ளம்

ஊத்துக்கோட்டை, மார்ச் 12: தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் கொசஸ்தலையாற்றின் தடுப்பணை நடுவில் மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பெரியபாளையம் அருகே, தாமரைப்பாக்கம் பகுதியில் கடந்த 2024ம் வருடம் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த மழையால் ஆறு, ஏரிகளில் நீர் நிரம்பி காணப்பட்டது. இந்நிலையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் பூண்டி ஏரியில் இருந்து முதலில் 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர், படிப்படியாக உயர்த்தி வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் ஆற்றின் கரைகள் இருபுறமும் சேதமடைந்தது.

மேலும், தடுப்பணை பகுதியில் கான்கிரீட் சிமென்ட்டால் போடப்பட்ட தரைப்பகுதி சேதமடைந்து மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், கடந்த சில வருடங்களுக்கு முன்பும் புயல் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கரைகள் சேதமடைந்தது. அதனை சீரமைக்க அப்போதைய முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ரூ.1 கோடி நிதி ஒதுக்கினார். மேலும், தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் கரைகள் சேதமடைந்து பள்ளம் விழுவது தொடர்கதையாகி வருகிறது. வரும் காலத்திற்குள் கரைகள் மற்றும் கான்கிரீட் சீரமைக்கபடாவிட்டால், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் வலுவிழுக்கும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு கரைகளை பலப்படுத்தி பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Kosasthalai dam ,Uthukottai ,Thamaraipakkam dam ,Thamaraipakkam ,Periypalayam ,Mikjam cyclone ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு தொடக்கம்