பொன்னேரி, மார்ச் 10: மீஞ்சூர் அருகே ஊரணம்பேடு கிராமத்தில் மின் கசிவால் குடிசை வீடு எரிந்து சாம்பலானதில், உள்ளே படுத்து இருந்த பத்தாம் வகுப்பு மாணவன் உடல் கருகி பரிதாபமாக பலியானான். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட ஊரணம்பேடு கிராமத்தில் விநாயகர் கோயில் தெருவில் வசித்து வருபவர் முனுசாமி-மாலதி தம்பதியரின் மகன் சீனிவாசன்(15). திருவெள்ளைவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், நேற்று முனுசாமி-மாலதி உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் நேற்று செங்கழனீமேடு கிராமத்தில் கபடி போட்டி நடைபெற்றது. போட்டியை பார்த்துவிட்டு நேற்று அதிகாலை நான்கு மணிக்கு வீட்டுக்கு வந்து மாணவனர் படுத்திருந்தான். அப்போது, மின் கசிவு ஏற்பட்டு குடிசை வீடு சாம்பல் ஆனதில் குடிசையில் படித்திருந்த சீனிவாசன் உடல் கருகி பரிதாபமாக பலியானான்.
நேற்று காலையில் வந்து பார்த்த மாணவனில் பாட்டி சகுந்தலா பேரன் இறந்தது பார்த்து கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து புகை மண்டலத்தை தண்ணீர் ஊற்றி அனைத்து மாணவன் சீனிவாசன் உடனே வெளியே எடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து காட்டூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். காட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சீனிவாசனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் தீயில் கருகி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மாணவன் சீனிவாசன் வருகிற 11ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள நிலையில் இது சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
