- பஞ்செட்டி கிராமம்
- திருவள்ளூர்
- வருவாய் அதிகாரி
- நீலவனத்து நிலவன்
- அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக் குழு
- பஞ்செட்டி
- பொன்னேரி தாலுகா, திருவள்ளூர் மாவட்டம்...
திருவள்ளூர், மார்ச் 11: திருவள்ளூர் அருகே பஞ்செட்டி கிராமத்தில் சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம், அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாவட்ட நலக்குழு உறுப்பினர் நீலவானத்து நிலவன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா பஞ்செட்டி என்ற கிராமத்தை சுற்றிலும் சுமார் 10 கிராமங்கள் உள்ளன. இந்த, கிராமங்களில் பல்லாயிரக்கணக்கில் வசித்து வருகின்றனர். தற்போது, அந்தப் பகுதியில் ஜிஎன்டி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. எங்கள் கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைந்துள்ளது. எங்கள் கிராமத்திலிருந்து சுற்றியுள்ள 10 கிராம மக்களும், இந்த மேம்பாலத்திற்கு செல்வதற்கு 3 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும்.
பிள்ளைகள் பள்ளிக்கு செல்லவும், 100 நாள் வேலை ஆட்கள் செல்லவும் மற்றும் வேலைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் செல்லவும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று, அந்த மேம்பாலத்தை கடக்க வேண்டியதாய் உள்ளது. மேலும், திடீர் விபத்து ஏற்பட்டால் கூட 3 கிலோ மீட்டர் கடந்து சென்று, அந்த மேம்பாலத்தின் வழியாக செல்ல வேண்டியதாக உள்ளது. எங்கள் ஊரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடந்து போகும் போது அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.
இந்த, பல்வேறு பிரச்னைகளை தவிர்ப்பதற்காக பஞ்செட்டி கிராமத்தில் சுரங்கப்பாதை அமைத்து தருமாறு பலமுறை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நாங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். எனவே, உடனடியாக பஞ்சட்டி கிராமத்தில் ஜிஎன்டி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலரிடம், அரசு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாவட்ட நலக் குழு உறுப்பினர் நீலவானத்து நிலவன் தலைமையில், கிராம முக்கிய பிரமுகர்கள் பன்னீர், பொன்ராஜ், ராமதாஸ், கோவிந்தம்மாள், முருகவேல் மற்றும் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
