பாரிஸ்: கடந்த 2022ம் ஆண்டில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த போது, உலக அளவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டு கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. அப்போது சந்தையை சீர் செய்ய சர்வதேச எரிசக்தி முகமை தனது கையிருப்பில் இருந்த 182 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை அவசர தேவைக்காக சந்தையில் விடுவித்தது. இந்நிலையில் ஈரானுக்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் இடையே தொடங்கிய போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உலகின் 20 சதவீதம் எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியதால், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 115 டாலர் வரை உயர்ந்தது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த சர்வதேச சக்தி முகமை இன்று அவசர ஆலோசனையை மேற்கொண்டது.
இதில் 2022ம் ஆண்டை விட கூடுதலாக சுமார் 182 மில்லியன் பேரல் (சுமார் 300 மில்லியன் முதல் 400 மில்லியன் பேரல்கள்) கச்சா எண்ணெயை சந்தையில் விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 31 உறுப்பு நாடுகள் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளன. சர்வதேச சக்தி முகமையின் இந்த அறிவிப்பை தொடர்ந்து சந்தையில் கச்சா எண்ணெய் விலை 87 டாலராக சரிந்துள்ளது. இந்த அமைப்பின் வசம் தற்போது 1.2 பில்லியன் பேரல் எண்ணெய் கையிருப்பு உள்ளது. இது பெர்சிய வளைகுடாவில் இருந்து விநியோகம் முழுமையாக துண்டிக்கப்பட்டாலும் 124 நாட்களுக்கு தட்டுப்பாடின்றி சமாளிக்க போதுமானது என்று அந்த அமைப்பின் இயக்குனர் பாத்தி பிரோல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
