சென்னை: கூடுதல் இடங்களை கேட்டு கூட்டணி கட்சிகள் பிடிவாதம் காட்டுவதால், அதிமுக – பாஜ கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் மாதம் 3வது வாரத்தில் தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுக்கு சீட் ஒதுக்கப்பட்டு விட்டது. மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இறுதி செய்யப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் பாஜ, பாமக (அன்புமணி), அமமுக, தமாகா, பாரிவேந்தரின் ஐஜேகே, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகள் தான் அதிமுக கூட்டணியில் உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், இந்த கட்சிகள் யார் தலைமையில் தேர்தலை சந்திக்க போகிறது என்ற உறுதியான தகவல் இன்னும் தெரியவில்லை. காரணம், சில கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளது. சில கட்சிகள் பாஜவுடன் கூட்டணியில் உள்ளது. அதனால், அதிமுகவிடம் இருந்து பாஜ இடங்களை பெற்று, சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் குழப்பம் நீடிக்கிறது.
தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால், அதிமுக கூட்டணியில் எத்தனை இடங்களில் தாங்கள் போட்டியிட போகிறோம் என்ற தகவல்கள் இதுவரை இல்லை. அதிமுகவுக்கு பாஜ தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. குறிப்பிட்ட தொகுதிகளை தங்களுக்கு தர வேண்டும் என்று பாஜ மேலிடம் கண்டிப்புடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியிடம் தெரிவித்து விட்டது. அதனால், அதிமுகவினர் போட்டியிடலாம் என்று கூறப்பட்ட பல தொகுதிகளை பாஜவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் உள்ள சில தலைவர்களை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற குழப்பத்தில் உள்ளார்.
எது எப்படி இருந்தாலும், தற்போது கூட்டணி கட்சிகளுக்கு விரைவில் தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டிய சூழ்நிலையில் எடப்பாடி உள்ளார். அதன்படி, தற்போதய நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 40 இடங்கள் வரை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த 40 இடங்களில் அமமுகவுக்கு 9 இடங்களையும், தமாகாவுக்கு 2 அல்லது 3 இடங்களையும் பாஜ ஒதுக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோன்று, இந்த கூட்டணியில் உள்ள ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், ஜான் பாண்டியன் ஆகியோருக்கு தலா ஒரு இடங்களை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளது.
அடுத்து, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு (அன்புமணி) 18 இடங்கள் வரை வழங்க அதிமுக தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், பாஜ தற்போது அதிமுக ஒதுக்க முடிவு செய்துள்ள இடங்களைவிட கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று பிடிவாதம் காட்டுவதால் தொகுதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இந்த நிலையில், கூட்டணி தொகுதி ஒதுக்கீடு சம்பந்தமாக நேற்று சென்னை, பட்டினப்பாக்கத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது, ‘தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளது. விரைவில் தொகுதி பங்கீட்டை முடியுங்கள். அப்போதுதான், கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியும்’ என்று வலியுறுத்தியுள்ளார். அதன்படி, இன்னும் சில தினங்களில் அதிமுகவில் தொகுதி உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அதிமுக கூட்டணி கட்சிகளில் தமாகா மட்டும் தனி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது. சிறிய கட்சிகள் இரட்டை இலை அல்லது தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளது. அதேநேரம், இந்த தேர்தலில் அதிமுக குறைந்தபட்சம் 160 இடங்களில் இருந்து 170 இடங்கள் வரை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு விரைவில் முடிவடைந்து எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்ற விவரங்கள் வெளியிடப்படும் என்றும் அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
* பிரதமர் மோடி இன்று திருச்சி வருகை
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதையொட்டி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. புதுச்சேரி மற்றும் திருப்பரங்குன்றத்தில் கடந்த வாரம் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, இன்று (11ம்தேதி) மீண்டும் தமிழகம் வருகிறார். திருச்சி பஞ்சப்பூரில் நடைபெறும் அரசு விழா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதற்காக கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து தனிவிமானம் மூலம் மாலை 5.10 மணிக்கு பிரதமர் திருச்சி விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் 5.30 மணிக்கு விழா நடை பெறும் இடமான பஞ்சப்பூருக்கு செல்கிறார்.
முதலில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு நிறைவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பேசுகிறார். அதன் பின்னர், அதே பகுதியின் மறுபக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றுகிறார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி மற்றும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, தமாகா, அமமுக, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
