×

காஸ் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் போராட்டம்

தண்டையார்பேட்டை: காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், வடசென்னை கிழக்கு மாவட்டம் மகிளா காங்கிரஸ் சார்பில் வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத் தலைமை வகித்தார். வட சென்னை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி தாரணி திரவியம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஆர்.கே.நகர், ராயபுரம், திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் விறகு அடுப்பு வைத்தும், காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும், காஸ் விலை உயர்வை கண்டிக்கும் விதமாக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் திடீரென காஸ் சிலிண்டரை பாடையாக கட்டி தலை மீது தூக்கி கொண்டு வண்ணாரப்பேட்டை வள்ளலார் சாலையில் மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து தண்டையார்பேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை தடுத்து கலைந்து போக வைத்தனர். ஆர்ப்பாட்டத்தை வடசென்னை கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் எம்.எஸ்.திரவியம் ஏற்பாடு செய்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

* மயங்கி விழுந்து நிர்வாகி பலி
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, காங்கிரஸ் கட்சி நிர்வாகி திருவொற்றியூர் 14வது வட்டத்தை சேர்ந்த மாலகொண்டையா (45) என்பவர் திடீரென கூட்டத்தில் மயங்கி விழுந்தார். உடனே போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே இறந்தார்.

Tags : Magla Congress ,Dandiyarpettai ,Vannarpet ,Post Office ,eastern ,Vandachennai ,Tamil Nadu Women's Congress ,President ,Hasina Syed ,
× RELATED போர் சூழலை காரணம் காட்டி மக்களின்...