சொன்னாரு: தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உடல்நலத்தைப் பரிசோதித்து, அவர்களுக்கு வேலை இடத்திலேயே மருத்துவ சேவை வழங்கும் ‘தொழிலாளர்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் தமிழ்நாடு அரசால் 2023-24ம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
செஞ்சாரு: தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றில் மிகவும் முக்கியமான ஒன்று “தொழிலாளர்களைத் தேடி மருத்துவம்” திட்டம். தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தினமும் நீண்ட நேரம் வேலை செய்வதால், அவர்கள் உடல்நலப் பரிசோதனை செய்ய மருத்துவமனைக்குச் செல்ல நேரமில்லாமல் இருப்பது பொதுவான பிரச்னையாக உள்ளது. இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் நோக்கில் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களுக்கே சென்று மருத்துவ சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டு, 2024ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி “தொழிலாளர்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
“தொழிலாளர்களைத் தேடி மருத்துவம்” திட்டம், தமிழ்நாடு அரசின் மற்றொரு முக்கியமான சுகாதாரத் திட்டமான “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் விரிவாக்கமாகக் கருதப்படுகிறது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அடங்கிய மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் தொழிற்சாலைகளுக்கு நேரடியாகச் சென்று தொழிலாளர்களின் உடல்நிலையைப் பரிசோதிக்கின்றனர். தேவையான மருந்துகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், தொழிலாளர்களின் உடல்நலத்தைப் பணியிடங்களிலேயே சோதித்து, நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதாகும். உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரக சோதனைகள், பொது மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் தொடர் சிகிச்சை ஆகியவை இதில் அடங்கும். அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், தொழிற்சாலை ஊழியர்கள் போன்றோர் இதன் பயனாளிகளாக உள்ளனர். வேலை நேர இழப்பு இல்லாமல் மருத்துவம் பெறுவது இத்திட்டத்தின் சிறப்பு.
தொழிலாளர்களைத் தேடி மருத்துவம் திட்டம் முதற்கட்டமாக 43.89 லட்சம் ரூபாய் செலவில் 711 தொழிற்சாலைகளில் பணியாற்றும் 8,35,000 பேரை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டது. அதில் இதுவரை 3,90,111 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 30,506 பேருக்கு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட இணைநோய் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று, ஏற்கெனவே தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்ட 12,468 பேருக்கு தொடர் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சிறு வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொற்றா நோய் பரிசோதனைகளை “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் கீழ் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 7,750 சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றும் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெறுவர். இந்தத் திட்டம் தொழிலாளர்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதோடு, நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுப்பதற்கும் உதவுகிறது. இதன் மூலம் தொழிலாளர்கள் ஆரோக்கியமாக இருந்து தொடர்ந்து தங்கள் பணியைச் செய்ய முடிகிறது. அதே நேரத்தில் தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறனும் அதிகரிக்கிறது.
