தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பூத் கமிட்டி அமைக்கப்பட்டு வாக்குச்சாவடி முகவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது. ஆனாலும் தேர்தல் பணிகளை தொடங்க முடியாமல் வேட்பாளர்கள் தவிக்கின்றனர். காரணம் பூத் கமிட்டி நிர்வாகிகளை கூட நியமிக்க முடியவில்லை என கட்சியினர் புலம்ப தொடங்கிவிட்டார்களாம். இதேபோல் தவெகவுலையும் பெரும்பாலான இடங்களில் நிர்வாகிகளுக்கு தங்கள் தொகுதியில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் எவை என்ற விவரங்களை கூட தெரிந்துகொள்ள முடியவில்லையாம்.
மேலும், தொகுதியின் வரலாறு குறித்தும், தொகுதிக்கு என்ன கோரிக்கை அளிக்கலாம் என்பதும் தெரியாமல் உள்ளார்களாம். அரசியல்ல ஓரளவுக்கு அனுபவம் இருக்குற யாராவது கட்சிக்குள்ள இருந்தால்தான், பூத் கமிட்டின்னா என்ன? பூத் கமிட்டி நிர்வாகிகளை எப்படி நியமிப்பார்கள்னு சொல்லுவாங்க. மொத்தமே புதுமுகங்களாக இருக்குறதால, எதை, எப்படி செய்யணும்னு தெரியாம இருக்குறாங்களாம். இதனால, கிரிவலம் மாவட்டத்துல கலசமான தொகுதியில இருந்து, தவெக நிர்வாகிங்க வேற கட்சிக்கு தாவிடலாமான்னு யோசிச்சிட்டு வர்றாங்களாம். கிரிவலம் மாவட்டம் மட்டுமில்ல, பெரும்பாலான மாவட்டங்கள்ல தவெகாவுல இந்த நிலைமையாத்தான் இருக்குதாம்.
* நெல்லை நமக்கு தொல்லை… சாத்தூரை சுற்றும் நயினார் பேமிலி…! தந்தைக்காக மகன் ஓட்டு வேட்டை
நெல்லை சட்டமன்ற தொகுதியில் பாஜ மாநிலத்தலைவரான நயினார் நாகேந்திரன், கடந்த முறை போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். இம்முறை இதே தொகுதியில் நின்றால் சறுக்கி விடுவோம் என்பதாலேயே, விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் தொகுதியை நயினார் டிக் அடித்திருக்கிறார். இதற்காக இவரின் மகனான நயினார் பாலாஜி, தற்போது சாத்தூர் தொகுதியில் தீவிர தேர்தல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்ற நெல்லை தொகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகம் இருப்பதும், அங்கு இரு பிரிவினரிடையே அடிக்கடி நடக்கும் மோதல்கள் ஒருபுறம், இம்முறை ஆளும் அரசுக்கான திட்டங்களால் திமுக கூட்டணிக்கான ஆதரவு பலம் மறுபுறம் என தனக்கான பல்வேறு சமூகங்களின் ஓட்டுகளும் கிடைக்காமல் போகும் சூழலை நினைத்தே இந்த முடிவெடுக்கப்பட்டதாம்.
சாத்தூர் சட்டமன்ற தொகுதியில், தான் சார்ந்த சமூகத்தினர் அதிகளவில் இருப்பதைக் கருத்தில் கொண்டே அங்கு போட்டியிடலாம் எனும் முடிவுக்கு வந்துள்ளனர். எனவேதான் கடந்த 6 மாதங்களாகவே யாருக்கும் தெரியாமல் இந்த தொகுதிக்குள் இவர்கள் குடும்பத்தினர், உறவினர்கள், ஆதரவாளர்கள் வந்து போவதும், தொகுதிக்குள் தங்கிக் கொண்டு வாக்காளர்களை தன்வசப்படுத்த வசதியாக முக்கிய இடத்தில் சகல வசதிகளுடன் கிரையத்திற்கென வீடும் பார்த்து வருகின்றனராம்.
இதன் தொடர்ச்சியாகவே தற்போது சாத்தூர் அருகே சடையம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் இளைஞர்களுக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நயினார் நாகேந்திரன் மகனும், தமிழ்நாடு பாஜவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு அமைப்பாளருமான நயினார் பாலாஜி ஏற்பாடு செய்து நடத்தி இருக்கிறார். இப்படி சாத்தூர் தொகுதியை குறிவைத்தே நயினார் நாகேந்திரன் குடும்பத்தினர் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. வரும் தேர்தலில் தங்களுக்கென இத்தொகுதியில் சீட் கேட்டு பெறுவதிலும், மேல்மட்டம் வரையிலும் பேசி நயினார் பேமிலி அழுத்தம் கொடுத்து வைத்திருக்கிறதாம்.
