×

திட்டமிடல் இல்லை… தெளிவான நோக்கம் இல்லை… திறந்து சில மாதங்களிலேயே மூடப்பட்ட உத்தர பிரதேச விமான நிலையங்கள்: பயணிகள் வருகை இல்லாததால் ஏற்பட்ட அவலம்; பல நூறுகோடி மக்கள் நிதி வீணடிக்கப்பட்ட சோகம்

பாஜ ஆளும் மாநிலங்கள் சிறப்புடன் இருப்பதாக ஒன்றிய அரசும் அமைச்சர்களும் தலைவர்களும் அவ்வப்போது கூறி வந்தாலும், அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் அவற்றின் உண்மை நிலையை தோலுரித்து காட்டி விடுகின்றன. அந்த அளவுக்கு வட மாநிலங்கள் பொருளாதாரத்திலும், வாழ்க்கை தரத்திலும் பின்தங்கியுள்ளன. அந்த அரசுகள் ஏற்படுத்தும் உள்கட்டமைப்பு வசதிகளும் கூட விழலுக்கு இறைத்த நீராக பயனின்றி போய் விடுகின்றன. அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் கட்டப்பட்ட 7 விமான நிலையங்களில் 6 விமான நிலையங்கள் விமான போக்குவரத்தே இல்லாமல் மூடப்பட்டு விட்டன என்பது ஆர்டிஐ தகவலில் அம்பலம் ஆகியுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையரகம்தான் இந்த விவரங்களை அளித்துள்ளது.

உபியில் கட்டப்பட்ட 7 விமான நிலையங்களில் அயோத்தி விமான நிலையம் மட்டுமே இயங்கி வருகிறது. இந்த விமான நிலையம் 2023 டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டது. 2024 ஜனவரி 10ம் தேதி முதல் விமான போக்குவரத்து துவங்கியது. மற்றபடி 2024ல் துவக்கப்பட்ட அசம்கார், அலிகார், சித்திரகூட், ஷ்ரவஸ்தி, குஷிநகர் மற்றும் மொரதாபாத் விமான நிலையங்களில், விமான சேவை துவங்கி சில மாதங்களிலேயே நிறுத்தப்பட்டு விட்டன. அசம்கார், சித்திரகூட் விமான நிலையங்கள் 8 முதல் 9 மாதங்களே செயல்பட்டன. மொரதாபாத் 3 மாதங்கள் செயல்பட்டுள்ளது. ஷ்ரவஸ்தி, அலிகார் விமான நிலையங்கள் துவக்கப்பட்டு குறுகிய கால அளவிலேயே மூடப்பட்டு விட்டன என்பது விமான போக்குவரத்து ஆணையரகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1. குஷிநகர்: 2021 அக்டோபர் 20ம் தேதி குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது. விமான போக்குவரத்தும் துவங்கியது. 2022 மார்ச் மாதம், மாதத்துக்கு 54 விமானங்கள் இயக்கம் என்ற உச்சத்தை எட்டியது. இருப்பினும் 2023ம் ஆண்டில் விமான போக்குவரத்து படிப்படியாக குறைந்தது. அந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 விமானங்கள் மட்டுமே இங்கிருந்து இயக்கப்பட்டன. பின்னர் ஒரு விமானம் கூட வரவில்லை. 2024, 2025ம் ஆண்டுகளில் ஒரு விமானமும் வராததால் விமான நிலையம் மூடப்பட்டு விட்டது. இந்த விமான நிலையம் ரூ.327.3 கோடி செலவில் கட்டப்பட்டது. இதில் 20 சதவீத நிதியை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இந்த விமான நிலையம் மூலம் 2023-24 நிதியாண்டில் ரூ.719.89 லட்சம், 2024-25ல் 759.35 லட்சம் மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது.

2. அசம்கார்: அசம்கார் விமான நிலையம் உதான் திட்டத்தின் கீழ் ரூ.29.57 கோடி செலவில் கட்டப்பட்டு 2024 மார்ச் 10ம் தேதி திறக்கப்பட்டது. முதலில் இங்கிருந்து லக்னோவுக்கு விமான சேவை வழங்கப்பட்டது. புள்ளி விவரங்களின்படி அதே ஆண்டு ஜூலையில் 103 பயணிகள், ஆகஸ்டில் 139, செப்டம்பரில் 160, அக்டோபரில் 125 பயணிகள் வந்து சென்றுள்ளனர். நவம்பரில் 29 பயணிகளாக குறைந்தது. டிசம்பரில் ஒரு பயணி கூட வரவில்லை. செயல்பாடற்ற நிலைக்கு தள்ளப்பட்ட இந்த விமான நிலையம் மூடப்பட்டு விட்டது.

3. அலிகார் விமான நிலையம்: இதுவும் உதான் திட்டத்தில் 2024 மார்ச் 10ம் தேதி துவக்கப்பட்டது. அதே ஆண்டு ஜூலையில் பயணிகள் எண்ணிக்கை 100 ஆக இருந்தது, ஆகஸ்டில் 258 ஆக உயர்ந்தது. பின்னர் படிப்படியாக சரிந்து 2024 டிசம்பரில் 26 பயணிகளானது. இதுவும் மூடப்பட்டு விட்டது. இந்த விமான நிலையம் ரூ.29.4 கோடியில் கட்டப்பட்டது. பின்னர் மேம்பாட்டுபணிகள் , உள்கட்டமைப்பு போன்றவை சேர்த்து பின்னர் ரூ.100 கோடியானதாக சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

4. சித்திரகூட்: உபி மாநிலம் சித்பூர் அருகே உள்ள இந்த விமான நிலையம் உதான் திட்டத்தில் ரூ.32.79 கோடியில் கட்டப்பட்டது. 2024 ம் ஆண்டு மார்ச் மாதம் துவக்கப்பட்டது. அதே ஆண்டு ஜூலையில் 115 ஆக இருந்த பயணிகள் எண்ணிக்கை அக்டோபரில் 2019 என்ற உச்சத்தை எட்டியது. நவம்பரில் 76 பயணிகள் டிசம்பரில் 12 பயணிகளாக எண்ணிக்கை சரிந்தது. இதுவும் தற்போது இயக்கத்தில் இல்லை.

5. ஷ்ரவஸ்தி: ஷ்ரவஸ்தி விமான நிலையம் உதான் திட்டத்தில் ரூ.29 கோடியில் கட்டப்பட்டது. அந்த ஆண்டு ஜூலையில் 86 ஆக இருந்த பயணிகள் எண்ணிக்கை டிசம்பரில் 14 ஆக குறைந்தது. இதுவும் மூடப்பட்டு விட்டது. இந்த விமான நிலையத்தை 2 மற்றும் 3வது கட்டங்களாக மொத்தம் 750 ஏக்கரில் விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் மூடப்பட வேண்டிய அவல நிலை எழுந்துள்ளது.

6. மொரதாபாத்: மொரதாபாத் ரயில் நிலையத்தில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவிலும், ராம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. ரூ.29 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த விமான நிலையம் இவை எல்லாமே ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்புடன் உதான் திட்டத்தில் திறக்கப்பட்ட விமான நிலையங்கள். ஒவ்வொரு இடத்தில் விமான நிலையம் அமைக்கும்போதும் அது மக்கள் பயன்பாட்டுக்கு உகந்ததா, விமான போக்குவரத்து எவ்வளவு இருக்கும், சுற்றுலா தலமா, முக்கிய நகரமா என பல்வேறு கோணங்களிலும் ஆய்வு செய்யப்படும்.

ஆனால், ஏதோ ஒரு நினைவிடம், பிரசித்தி பெற்ற கோயில் இருக்கிறது என்று மட்டும் காரணம் காட்டி அவசர கதியில் எந்தவித திட்டமிடலும் தொலை நோக்குப் பார்வையும் இல்லாமலேயே இந்த விமான நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. ஒன்றிய அரசால் உடனடி ஒப்புதல் தரப்பட்டு ஒரே நாளில் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட விமான நிலையங்கள் அமைக்க ரூ.500 கோடி முதல் ரூ.700 கோடி வரை செலவாகியிருப்பதாக சிலதகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி மட்டுமே ஏறக்குறைய ரூ.500 கோடி செலவாகியுள்ளது. எந்த வித திட்டமிடலும், தொலை நோக்கும் இல்லாமல் மக்கள் வரிப்பணம் அனைத்தும் வீணாகி விட்டது, பாஜ இரட்டை இன்ஜின் ஆட்சியின் அவலத்தை எடுத்துக்காட்டுவதாக பல தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.

* ஓசூர் விமான நிலையத்துக்கு அனுமதி தராமல் இழுத்தடிப்பு
பாஜ ஆளும் மாநிலங்களுக்கு தாராளம் காட்டி மக்கள் நிதியை வீணடிக்கும் ஒன்றிய அரசு, ஓசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டிய தேவை இருந்தும் புறக்கணித்து வருவது அதன் மாற்றாந்தாய் மனப்பான்மையை காட்டுவதாக பல தரப்பினரும் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் முக்கிய தொழில் மையமாக திகழும் ஓசூரில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் சர்வதேச கிரீன்பீல்டு விமான நிலையம் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், அருகிலேயே கர்நாடகா மாநிலத்தின் பெங்களூருவில் 2வது விமான நிலையம் அமைப்பதற்கான வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மேலும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் சுற்றளவில் புதிய விமான நிலையத்தை அமைக்கக் கூடாது என ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது வரும் 2033ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்ற காரணத்தை காட்டி முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. ஓசூர் விமான நிலையத்துக்கு 2,900 ஏக்கரில் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதில் 800 ஏக்கர் நிலம் அரசு வசம் உள்ளது. ஓசூர் சர்வதேச விமான நிலையம் அமையவிருக்கும் இடமானது பெங்களூரு சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு அருகில் உள்ளது.

இந்த விமான நிலையம் அமைந்தால் 200 தொழிற்சாலைகள், 3,000 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மையமாக, முக்கிய ஏற்றுமதி, இறக்குமதி தளமாக திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, ‘‘எச்ஏஎல் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு துறை திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஓசூர் விமான நிலையத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை,’’ என்று கூறியுள்ளார்.

Tags : Uttar Pradesh ,EU government ,Bahia ,
× RELATED காதுல பூ சுத்துறாரு… தங்கம் விக்கிற...