×

பாமக கட்சி, சின்னம், கொடிக்கு உரிமை கோரி வழக்கு தொடர ராமதாசுக்கு உரிமை இல்லை: உரிமையியல் நீதிமன்றத்தில் அன்புமணி தரப்பு மனு

சென்னை: சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், பாமகவின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம் இந்த மனுவுக்கு அன்புமணி, தேர்தல் ஆணையம் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி தர்மபிரபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்புமணி தரப்பில் கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் பதில் மனுத்தாக்கல் செய்தார். ராமதாசுக்கு 87 வயது ஆகி விட்டது. வயது மற்றும் மருத்துவ காரணங்களால் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் ராமதாஸ் இல்லை.இந்நிலையை பயன்படுத்தி சிலர் ராமதாசை தவறாக வழிநடத்துகிறார்கள்.

அவர் நிறுவனர் என்ற அடிப்படையில் பாமக கட்சியில் ஆலோசனை, வழிகாட்டுதல் மட்டுமே மேற்கொள்ள முடியும். பாமகவின் பொதுக்குழுவுக்குத்தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது. இந்த வழக்கில் பாமகவின் பொதுசெயலாளர் வடிவேல் ராவணனை வழக்கில் சேர்க்காமல், ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. பாமக கட்சியில் உரிமை கோரி வழக்கு தொடர ராமதாசுக்கு உரிமை இல்லை. தன்னை தானே தலைவர் என்று ராமதாஸ் அறிவித்துக் கொண்டு விதிகளை திருத்தியதாக கூறப்பட்ட விவரத்தை தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தவில்லை என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த பதில் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த மனுவுக்கு மார்ச் 11ம் தேதிக்குள் ராமதாஸ் தரப்பு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

Tags : Ramadas ,Balamaka ,Anbumani ,Chennai ,Palamaka ,Chennai Proprietary Court ,Pamaka ,
× RELATED காதுல பூ சுத்துறாரு… தங்கம் விக்கிற...