×

நாம் கொடுப்பவரா? பெற்றுக் கொள்பவரா?

என்றென்றும் அன்புடன் 12

நம்முடைய மொழி நண்பர்களுக்கு புரிகிறதா?
நாம் பேசுவது நம் நட்புகளுக்கு புரிகிறதா?
நாம் நினைப்பதை வார்த்தைகளில் கொண்டு வரமுடிகிறதா ?

பெருவாரியான நட்புகள் முறிவதற்கு காரணம் நாம் சிந்தனைகளில் வேறுபட்டு விடுகிறோம். அதுவே தொடர்பற்ற வார்த்தைகள் பரிமாற்றத்தில் கொண்டு விடுகிறது.பேசுவது ஒரே மொழியாக இருந்தாலும் நம்மால் புரிய வைக்க முடிவதில்லை. புரிந்துகொள்ளவும் முடிவதில்லை. நட்பு ஒரு நல்ல எண்ணத்தில் கருத்தரிக்கிறது. அந்த நட்புகள் வளரும்பொழுது கவனமும், அக்கறையும் தேவைப்படுகிறது. சுயநலம் என்கிற நஞ்சு ஏதோ ஒரு இடத்தில் புகுந்து விட்டால், அதை வேரோடு களைய வேண்டும். சுயநலம் நட்பை முறிக்கும். சுயநலம் மொழியை வேறுபடுத்தும். வார்த்தைகளும், அர்த்தங்களும் புரியாமல் பேச்சற்ற ஒரு நிலையில் தள்ளும்.

மஹாபாரதத்தில் கர்ணன் நாகாஸ்

திரத்தை அர்ஜுனனை நோக்கி ஏவுகிறான். அவனுடைய குறியானது அர்ஜுனனின் கழுத்துப்பாகத்தை நோக்கி இருக் கிறது. அதே சமயத்தில் கிருஷ்ணன் தேரை கொஞ்சம் வேகமாக அழுத்த கிருஷ்ணனின் செய்கைகளை நன்றாக புரிந்து கொள்ளும் குதிரைகள் மண்டி யிட்டன. தேர் கீழே போயிற்று. கர்ணனின் நாகாஸ்திரமோ அர்ஜுனனின் தலைக்கவசத்தை தட்டிக் கொண்டு போயிற்று. சல்யனுக்கு ஆத்திரம் பொங்கிற்று.

‘‘முட்டாளே, அர்ஜுனனின் மார்பை அல்லவா குறி வைக்க வேண்டும்?”

தன்னுடைய பெருமைகளில், பராக்கிரமத்தில் ஆழ்ந்த கர்ணனுக்கு சல்யனின் வார்த்தைகளோ, செயல்களோ புரியவில்லை. இரண்டு பேரும் பேசும் மொழிஒன்றே. ஆனாலும் அர்த்தம் புரியாமல் போனது. அதுவே கிருஷ்ணனின் செய்கை, மொழி அவருடைய குதிரைகளுக்கு புரிந்தது. குதிரைகள் மேல் அவர் கட்டிய அன்பும், பரிவும் அதன் தேவைகளைப் பூர்த்தி செய்த விதமும் அவரைப் புரிய வைத்தது. வார்த்தைப் பரிமாற்றம் இல்லாமல் புரிந்து கொண்டன.

ஜெயத்ரதனை சூரிய அஸ்தமனத்திற்கு முன் கொல்லுவதாக சபதம் செய்தான், அர்ஜுனன். போர்க்களம் உக்கிரமாக இருந்தது. கிருஷ்ணரின் குதிரைகள் சோர்ந்து போயிற்று. அர்ஜுனன் அம்பால் ஒரு சிறு தடுப்பு ஏற்படுத்தினான். குதிரைகளுக்கு தேவையான உணவும், தண்ணீரும் கொடுத்து , அவைகளை தடவிக் கொடுத்து அன்பு செய்கிறார், கிருஷ்ணன். அவரின் ஒவ்வொரு அசைவுகளும் குதிரைகளுக்கு புரிந்தன.

சல்யனும் கர்ணனும் புரிந்துகொள்ளவோ, அன்பு பாராட்டவோ எந்த நேரத்தையும் ஒதுக்கவில்லை. அவர்களின் செயல்கள் அவரவர் அகங்காரத்தை இன்னொருவர் மீது செலுத்துவதுபோல் இருந்தது. அன்பு, நம்பிக்கை, அக்கறை என்பதை ஒருவருக்கு ஒருவர் பரிமாறவே இல்லை . முடிவில் ஒருவர் பேசும் வார்த்தைகள் மற்றவருக்கு புரியாமல் போனது.

நட்பில் பரஸ்பர பரிமாற்றங்கள் தேவை. அதற்காக அதை வியாபாரமாகக்கொள்ளக் கூடாது. அவை இயல்பாக நடக்க வேண்டும். நாம் கொடுப்பவரா? பெற்றுக் கொள்பவரா? ஒரு சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் . பெற்றுக்கொள்பவர்கள் பெருமைப்படும்லும் தங்கள் ஆளுமையை செலுத்துவார்கள் . பெற்றுக் கொள்வது என்பது பொருளோ, பரிசோ இல்லை .
அவர்கள் எடுக்கும் முடிவே இறுதியாக இருக்கும் பெரும்பாலான நேரங்களில்,மற்றவரின் விருப்போ, வெறுப்போ அவர்களை சிறிதும் பாதிக்காது கொடுப்பவர்கள் பெரும்பாலும் தோற்றுக்கொண்டே போவார்கள். அவர்கள் தோற்பது போல் இருக்கும். அவர்களே அந்த நட்பை தாங்கிப் பிடிப்பதற்கு வேண்டிய முதலீடுகளை செய்து கொண்டே இருப்பார்கள்.

கொடுப்பவர்களுக்கு அலுப்போ, கோபமோ, அதிருப்தியோ வந்தால் அந்த நட்பு தடுமாறும். சல்யனும், கர்ணனும் இரண்டு பேருமே பெற்றுக் கொள்பவர்கள். அவரவர் புகழை மற்றவர் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்து தங்களை முன்னிறுத்தியபடி இருந்தனர். அந்த இடத்தில் அக்கறையோ பரிவோ இல்லாமல் போனது. நட்பு பெரும் வீழ்ச்சி அடைந்தது.

கிருஷ்ணனுக்கோ போர்க்களத்திலும், குதிரைகளின் மேலிருந்த அன்பு அதன் தேவைகளை பூர்த்திசெய்ய வைத்தது. கொடுப்பவராக இருந்தார். கொடுப்பவர்கள் (giver) பெற்றுக் கொள்பவர்கள் (Taker) நட்பில் இருக்கும் பொழுது , இருவரும் ஏதோ ஒரு சமநிலையில் செயல் பட்டால் நட்பு வளரும். காப்பற்றப்படும். நட்பைக் காப்பாற்ற நிபந்தனை அற்ற அன்பு தேவை .நட்பு என்பது நண்பர்களிடம் மட்டும் அல்ல ,எல்லா உறவுகளும் நட்பில் முடியும். அதை பாதுகாக்க வேண்டியது பெரும் பொறுப்பு. முயலுக்கு 360 டிகிரி பார்வை உண்டு. ஆனால், அதனால் தன் கண் முன் நடப்பதை பார்க்க முடியாது. அதுபோல் பல நட்புகள் கண்முன் தன் நண்பரின் தேவையைப் பார்க்காமல் அவர்களையே முன் நிறுத்தி இருப்பார்கள்.

நட்புகளை காப்பாற்றுவது நல்ல வார்த்தைகள், பாராட்டுக்கள். அக்கறை. இதை எல்லாம் தாண்டி காது கொடுத்துக் கேட்பது. நம் பேச்சு, மொழி புரிந்து கொள்ளப்பட வேண்டும். நாமும் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இருவர் சம்பந்தபட்ட முடிவுகள் கலந்து ஆலோசிக்கப்பட வேண்டும். காற்று நிரப்பும் தலையணைபோல் நட்பிற்கு அன்பு என்கிற காற்று நிரப்ப வேண்டியதாய் இருக்கிறது. அதை நிரப்பிய பின்னும் கடுஞ் செயல் அல்லது சொல் என்கிற ஊசியால் குத்தாமல் இருந்தால், அந்த நட்பு நல்ல தலையணை. அமைதியான உறக்கத்தை தருவது போல், நட்பும் நம் வாழ்வை சிறப்பிக்கும்.

ரம்யா வாசுதேவன்

Tags :
× RELATED அர்த்தசாமபூஜை