×

பலவகை வடிவான தீர்த்தங்கள்

தீர்த்தங்கள் தெய்வ நிலையங்கள்

உலகப் படைப்பின்போது முதலில் வானமும், அதிலிருந்து வளியும் (காற்றும்), அதிலிருந்து நெருப்பும், அதிலிருந்து நீரும், அதிலிருந்து பூமியும் உண்டானதாகப் புராணங்கள் கூறுகின்றன. உலக அழிவின்போது பூமியின் மீது நெருப்பு மழை பொழிந்து யாவும் அழியும். அந்த நெருப்பையும் அழித்து நீர் எங்கும் நிறைந்திருக்கும். நீரால் உலகம் அழிவுறும் காலமே பிரளயம் எனப்படும். ஒவ்வொரு யுக முடிவிலும் பிரளயம் உண்டாகி உலகம் அழியும். அந்த வெள்ளத்திலிருந்தே பூமியும் பழையபடி அதில் உயிர்த்தொகுதியும் உண்டாகின்றன. எனவே, தண்ணீரே உலகிற்கு முதலும் முடிவுமாக இருக்கின்றது. இதையொட்டி சமயச் சடங்குகளின் தொடக்கத்திலும், வடிவிலும் தண்ணீர் வழிபடப்படுகிறது.

விழாக்கள் தீர்த்த சங்கிரணம் எனும் நீர் எடுத்து வருதலில் தொடங்கித் தீர்த்தவாரி எனும் நீரில் மூழ்கும் சடங்குடன் முடிவடைகின்றன. சிவாலயங்களில் தினமும் காலையில் நீரின் கடவுளான கங்கையை ஆலயத்திற்கு அழைத்து வரும் திருமஞ்சனம் கொண்டு வருதல் எனும் சடங்குடன் பூஜை தொடங்கப்பட்டு, இரவில் தீர்த்த ராஜனான பைரவரிடம் பூஜை முடிகிறது. பூஜையில் அகற்றப்படும் நிர்மால்யங்கள் தண்ணீரில் விடப்படுகின்றன.

சிவ பூஜை செய்பவர்கள் தாங்கள் தினமும் வழிபடும் லிங்கங்களை பூஜை முடிந்தபின் புனிதத் தீர்த்தத்தில் கரைத்து விடுவது வழக்கம். தினமும், ஓராயிரம் சிவலிங்கங்களை வைத்து வழிபட்ட பாணாசுரன் பூசையின் முடிவில் அவற்றை நர்மதை ஆற்றில் போட்டுக் கொண்டிருந்தான். அவன் தனது வாழ்நாள் முழுவதும் வழிபட்டு ஆற்றில் விட்ட சிவலிங்கங்களே காலப்போக்கில் உறுதிமிக்க கல் லிங்கங்களாக மாறிவிட்டன. அவையே இப்பொழுது கிடைக்கும் பாண லிங்கங்கள் ஆகும்.

ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விநாயகர்சதுர்த்தியன்று, விநாயகரைக் களிமண் அல்லது புற்று மண்ணால் செய்து வழிபட்டபின்னர், அந்த உருவத்தை அன்று மாலையோ, மூன்றாம் நாளிலோ ஆறு, குளம், கிணறு, ஏரி ஆகியவற்றில் விட்டு விடுகின்றனர். சென்னையைச் சுற்றியுள்ள ஊர்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டிப் பெரிய விநாயகர் சிலைகள் வணங்கப்படுகின்றன. பின்னர், குறித்த நாளில் அந்தச் சிலைகள் அனைத்தையும் சென்னை மெரீனா கடலில் விட்டு விடுகின்றனர்.

இதுபோன்றே மும்பையில் பெரிய அளவில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப்பட்டு, அது முடிந்தவுடன் சிலைகள் கடலில் விடப்படுகின்றன. இதுபோன்றே கிராமிய வழிபாட்டில் ஆண்டு தோறும் வழிபடப்படும் மாரியம்மன், கங்கையம்மன் முதலிய தெய்வ வழிபாட்டிலும் பூசையின் இறுதியில் பூசிக்கப்பட்ட உருவங்களை நீரில் விட்டுவிடுவது வழக்கம்.

கொங்கு மாவட்டத்தில், கிராமியத் தெய்வ விழாக்களின் தொடக்கத்தில் மூன்று கிளைகளாகப் பிரியும், அடிமரத்தை மேள தாளத்துடன் மலையிலிருந்து வெட்டிவருகின்றனர்.இதனை அலங்கரித்து நட்டு அதன் மீது பெரிய அகண்டத்தை வைத்து தீ மூட்டுவர். இதற்குக் `கம்பம் போடுதல்’ என்று பெயர். விழா முடியும் வரை அதில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும். விழா நாட்களின் காலையிலும், மாலையிலும் அந்த கம்பத்தைச் சுற்றிவந்து ஆடிப்பாடி, மகிழ்வர். விழாவின் முடிவில், மேளதாளத்துடன் அந்த முக்கிளைக் கொம்பைப்பிடுங்கி எடுத்துக் கொண்டு பெரிய ஊர்வலமாகச் சென்று அருகிலுள்ள ஆற்றில் விட்டு விடுகின்றனர்.

இவற்றின் மூலம், வழிபாடுகள் யாவும் நீரில் தொடங்கி நீரிலேயே முடியும் வகையில் அமைந்திருப்பதை அறிய முடிகிறது. மனிதன் தாயின் வயிற்றுக்குள் ஒரு நீர்ப்பையில் கருவாகி உருவாகிறான். இறுதியில் உலகின் தாயான தண்ணீரின் மடியில் சாய்கிறான். இதையொட்டி இறந்தவர்களின் உடலைக் கங்கையில் விட்டு வரும் வழக்கம் உள்ளது.

பல தெய்வங்கள் அவதாரத்தின் முடிவில் நீரில் மறைந்து விடுவதாகவே புராணங்கள் கூறுகின்றன. ராமர் அவதாரத்தின் முடிவில், சரயு நதியில் மூழ்கி மறைந்து விட்டார் என்று கூறப்படுகிறது. பலராம அவதாரத்தின் இறுதியில் அவர் வெண்ணிறப்பாம்பு வடிவம் கொண்டு மேலைக் கடலின் உள்ளே சென்று மறைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

Tags : Puranas ,earth ,
× RELATED அர்த்தசாமபூஜை