- அச்சுதமங்கலம்
- அருள்மிகு சோம்நாதர் கோயில்
- அருல்மிகு சோம்நாதர்
- கோவில்
- நன்னிலம் வடம்
- திருவாரூர் மாவட்டம்
- தேவரா
- பாடல்
- திருநாவுக்கரசர்
ஆலயம்: அருள்மிகு சோமநாதர் திருக்கோயில், அச்சுதமங்கலம், நன்னிலம்
வட்டம், திருவாரூர் மாவட்டம்
காலம்: பொ.ஆ. 12ஆம் நூற்றாண்டு
தேவாரப் பாடல் பெற்ற தலங்களுக்கு இணையாக, திருநாவுக்கரசரால் ‘‘வைப்புத் தலமாக” வைத்துப் போற்றப்பட்ட பெருமை உடைய இத்தலம், சோழர் காலத்துக் கலைப் பெட்டகமாகத் திகழ்கிறது.
இறைவன்: அருள்மிகு சோமநாதர் (சோமேஸ்வரர்)
இறைவி: அருள்மிகு சௌந்தர்ய நாயகி
திருமணத் தடை நீக்கும் தலம்:
சிவனும் பார்வதியும் திருமணக் கோலத்தில் அக்னி குண்டத்தை வலம் வரும் அபூர்வக் காட்சி இங்கே சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் ஒரு சிறந்த பிரார்த்தனைத் தலமாகும். இங்குள்ள கல்யாண சுந்தரருக்கு அபிஷேகம் செய்து, மாலை சாற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. சுவாமிக்குச் சாற்றிய மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்றால், விரைவில் பலன் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
சிற்ப சிறப்புகள்
இவ்வாலயத்தின் வெளிப்புற கோஷ்டங்களில் கஜஸம்ஹார மூர்த்தி, ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, நர்த்தன கணபதி, பிட்சாடனர் போன்ற சிற்பங்கள், கல் சாளரங்கள், தோரணங்களின் எழில் தோற்றம் காண்போர் அனைவரையும் கவர்ந்திழுக்கும்.
வரலாறு மற்றும் கல்வெட்டுச் செய்திகள்
பிற்காலச் சோழர் கலை மரபின் உச்சத்தைத் தொட்ட கோயில்களில் இதுவும் ஒன்று. இக்கோயில் குறித்த வரலாற்றுச் செய்திகள் வியப்பளிப்பவை.இக்கோயில் பொ.ஆ.1182-ஆம் ஆண்டு, மூன்றாம் குலோத்துங்க சோழனின் ராஜகுருவான ஸ்ரீகண்டசம்பு (என்கிற சுவாமி தேவர்) என்பவரால் எழுப்பப்பட்டது. பொ.ஆ.1237-ஆம் ஆண்டைச் சேர்ந்த மூன்றாம் ராஜராஜ சோழனின் (கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 21-ஆம் ஆட்சியாண்டு) கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன.
சிற்பிகளுக்கு கௌரவம்
ஐநூற்றுவ பெருந்தச்சன், ஈஸ்வர தேவ பெருந்தச்சன் ஆகியோர் தலைமையில் சிற்பிகள் பணியாற்றியதாக கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது. கலைஞர்களுக்குத் தகுந்த அங்கீகாரமும், பட்டங்களும் வழங்கிப் போற்றிய சோழர்களின் பண்பாட்டை இக்கோயில் இன்றும் பறைசாற்றுகிறது. இக்கோயிலின் எழிலார்ந்த சிற்பங்களைப் படைத்த சிற்பிகளுக்கு மன்னர்கள் ‘குலோத்துங்க சோழப் பெருந்தச்சன்’, ‘சோமேஸ்வர பெருந்தச்சன்’ போன்ற உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளனர்.வரலாற்று ஆய்வாளர்களும், ஆன்மிக அன்பர்களும் வாழ்நாளில் ஒருமுறை தரிசிக்க வேண்டிய தலம் இது.
மது ஜெகதீஷ்
