ஊட்டி: ஊட்டி- மஞ்சூர் சாலையில் விபத்து நடக்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் ரோலர் சேப்டி பேரியர் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகள் மலைப்பாங்கான பகுதிகளிலும், பள்ளத்தாக்குகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், பெரும்பாலான சாலைகள் அதிக கொண்டை ஊசி வளைவுகளையும், குறுகலாகவும் காணப்படுகிறது. ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையும் அதிக வளைவு மற்றும் கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது. இச்சாலையில் சில இடங்கள் குறுகலாக உள்ள நிலையில் விபத்து ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. விபத்துக்களை தடுக்க நெடுஞ்சாலை துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் கைகாட்டி முதல் குந்தா வரையில் உள்ள சாலையில் தற்போது விபத்துக்களை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலை துறை சார்பில், பல்வேறு இடங்களில் ரோலர் சேப்டி பேரியர் மூலம் சாலையோரங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இச்சாலைகளில் செல்லும் வாகனங்கள் எதிர்பாராத விதமாக விபத்துகளில் சிக்கினாலும், அவைகள் பள்ளங்களில் விழாமல் இந்த தடுப்புகளில் மோதி மீண்டும் சாலையிலேயே நிற்கும் நிலை உள்ளது. இதன் மூலம் பெரிய விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க வாய்ப்பு உள்ளதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போன்று ஊட்டி- மஞ்சூர் சாலையில் மேலும் ஒரு சில இடங்களில் விபத்துக்கள் அதிகம் நடக்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் இந்த ரோலர் சேப்டி பேரியர் தடுப்புகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
