×

கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசம் திருநள்ளாறில் சனி பெயர்ச்சி: பக்தர்கள் குவிந்தனர்

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சாமி கோயிலில் சனீஸ்வர பகவான் அனுகிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா கடந்த மாதம் 11ம் தேதி பந்தக்கால் முகூர்த்தத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 22ம் தேதி தருமை ஆதீனம் மற்றும் புதுவை அரசு சார்பில் நலன் குளத்தில் கங்கா ஆரத்தி வைபவம் நடந்தது. மார்ச் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை ஆன்மிக ஜோதிடர் மாநாடு நடந்தது.

நேற்று முன்தினம் சனி பகவான் தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளி கோயில் பிரகாரத்தில் வீதிஉலா வந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். சனி பெயர்ச்சியையொட்டி நேற்று அதிகாலை 2 மணி முதல் சனி பகவானுக்கு மஞ்சள் பொடி, தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி திருநள்ளாறு கட்டளை மடத்தில் தருமை ஆதீன குருமணிகளை, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதர் இனிப்பு பாயாசம் வழங்கி சனிப்பெயர்ச்சி விழாவிற்கு வரவேற்றார்.

பின்னர் மிக சரியாக காலை 8.24 மணி அளவில் சனிபகவானுக்கு வைர அங்கி அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீன 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதன், அமைச்சர்கள் திருமுருகன், லட்சுமி நாராயணன், கலெக்டர் இஷிதா ராட்டி மற்றும் எம்எல்ஏக்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி, தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து நளன் குளத்தில் புனித நீராடினர். பின்னர், கலிதீர்த்த விநாயகர் கோயிலில் வழிபட்டு சிதறு தேங்காய் உடைத்து மூலவர் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி, அம்பாள் பிராணாம்பிகை, அதனை தொடர்ந்து அனுக்கிரக மூர்த்தியான சனீஸ்வர பகவானை வழிபட்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. அதிகாலை முதல் சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார பூஜை செய்தும், விளக்கேற்றியும் வழிபட்டனர்.

Tags : Kumba Rasi ,Pisces Zodiac ,Saturn ,Tirunallar ,KARAIKAL ,LORD SANISWARA ,SRI DARBARANYESWARAR SAMI TEMPLE ,KARAIKAL DISTRICT, TRUNALLAARU ,Pandakal Muhurtha ,Darumaa Addinam ,Puthuwa ,
× RELATED எத்தனை சீட், எந்த சின்னம்? கமல் கட்சி ஆலோசனை