×

தேசிய கட்சிகளில் 85% தொகையை கைப்பற்றி; 2024-25ல் ரூ.6,769 கோடி பாஜக தேர்தல் நிதி வசூல்: செலவு அதிகரிப்பால் காங்கிரசுக்கு பற்றாக்குறை

புதுடெல்லி: தேசிய கட்சிகளின் வரவு மற்றும் செலவு கணக்குகள் குறித்த தற்போதைய புள்ளி விபரங்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ளது. கடந்த 2023-24ம் நிதி ஆண்டில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளின் மொத்த வருமானம் மற்றும் தேர்தல் செலவினங்கள் குறித்த தரவுகள் ஏற்கனவே வெளியாகியிருந்தது. அந்த காலகட்டத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தேர்தல் பணிகளுக்காக கணிசமான தொகையை திரட்டியிருந்தன. கடந்த முறை திரட்டப்பட்ட நிதியை விட நடப்பு நிதியாண்டில் கட்சிகளின் வருவாய் மற்றும் செலவு விகிதத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) தனது முந்தைய ஆய்வில் சுட்டிக்காட்டியிருந்தது. குறிப்பாக தேர்தல் பத்திரம் தொடர்பான விவகாரங்களுக்குப் பிறகு கட்சிகளின் நிதி ஆதாரம் குறித்த விவாதங்கள் நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் 2024-25ம் நிதி ஆண்டிற்கான தேசிய கட்சிகளின் நிதி நிலை குறித்த விரிவான அறிக்கையை ஏடிஆர் அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ஆளும் கட்சியான பாஜக 6,769.14 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி முதலிடத்தில் உள்ளது. இது மற்ற அனைத்து தேசிய கட்சிகளின் மொத்த வருமானத்தில் 85 சதவீதத்திற்கும் அதிகம் ஆகும். இதில் 6,124.85 கோடி ரூபாய் அதாவது 90.48 சதவீதம் நன்கொடைகள் மூலம் கிடைத்துள்ளது. தேர்தல் அறக்கட்டளைகள் வழியாக மட்டும் பாஜக 3,157.65 கோடி ரூபாயை பெற்றுள்ளது. அக்கட்சி தேர்தல் பிரசாரத்திற்காக 3,335.36 கோடி ரூபாய் உட்பட மொத்தம் 3,774.58 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது. இதன் மூலம் பாஜக வசம் 2,994.56 கோடி ரூபாய் உபரி நிதி உள்ளது.

அதே சமயம் காங்கிரஸ் கட்சியின் வருமானம் 918.28 கோடி ரூபாயாக உள்ளது. இது பாஜகவின் வருமானத்தை விட 7.3 மடங்கு குறைவு ஆகும். காங்கிரஸ் கட்சி கூப்பன்கள் விற்பனை மூலம் 350.12 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. ஆனால் அக்கட்சியின் செலவினம் 1,111.94 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதால் 193.66 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மற்ற கட்சிகளில் மா.கம்யூ கட்சி 172.60 கோடி ரூபாயும், பகுஜன் சமாஜ் கட்சி 58.58 கோடி ரூபாயும் வருமானம் ஈட்டியுள்ளன. ஆம் ஆத்மி கட்சி 39.28 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி அதில் 92 சதவீதத்தை செலவிட்டுள்ளது. இதுகுறித்து ஏடிஆர் அமைப்பின் பிரதிநிதி கூறுகையில் ‘தேசிய கட்சிகளின் மொத்த வருமானம் 7,960.09 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் தேர்தல் பிரசாரத்திற்காக மட்டுமே பெரும் பகுதி நிதி செலவிடப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் தணிக்கை அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளன’ என்று தெரிவித்தார்.

Tags : BJP ,New Delhi ,Association for Democratic Reforms ,Congress ,
× RELATED முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்...