×

மம்தா ஓட்டு வங்கியில் கைவைத்த எஸ்ஐஆர்

மேற்குவங்கத்தில் எஸ்ஐஆர் பணி முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. சிறப்பு தீவிர திருத்தப் பயிற்சியின் விளைவாக 63.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். சிறப்பு திருத்தத்திற்கு முன்பு 7.66 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கையை இப்போது சுமார் 7.04 கோடியாகக் குறைத்துள்ளது. மேலும், 60.06 லட்சம் வாக்காளர்கள் ஆவண சரிபார்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

இதை எல்லாம் பார்க்கும் போது மேற்குவங்க வாக்காளர் பட்டியலில் கிட்டத்தட்ட 1.23 கோடி வாக்காளர்கள், அதாவது ஆறு வாக்காளர்களில் ஒருவர், நீக்கப்பட்டுள்ளனர் அல்லது சரிபார்ப்பு பட்டியலின் கீழ் உள்ளனர். இந்த 1.23 கோடி வாக்காளர்களும் முதல்வர் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் வாக்குவங்கியில் இடம் பெற்றவர்கள். இந்த தேர்தலில் இது பெரும் விளைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மேற்குவங்கத்தில் உள்ள வடக்கு 24 பர்கானாக்கள், தெற்கு 24 பர்கானாக்கள், முர்ஷிதாபாத், மால்டா, வடக்கு தினாஜ்பூர் மற்றும் தெற்கு தினாஜ்பூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2011 முதல் இந்த மாவட்டங்கள் திரிணாமுல் வசம் உள்ளன. இதில் முர்ஷிதாபாத்தில் மட்டும் 11 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் விசாரணையின் கீழ் உள்ளனர்.

இது மாநிலத்திலேயே அதிகபட்சமாகும், அதைத் தொடர்ந்து மால்டாவில் சுமார் 8.3 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வடக்கு 24 பர்கானாக்களில், சுமார் 5.9 லட்சம் வாக்காளர்கள் இன்னும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் தெற்கு 24 பர்கானாக்களில் சுமார் 5.2 லட்சம் வாக்காளர்கள் இதுபோன்ற பிரச்னையில் உள்ளனர். இந்த மாவட்டங்களிலும் சுமார் 23 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாக்களில் ஆதிக்கம் செலுத்தும் கட்சி தான் இதுவரை மேற்குவங்க ஆட்சியை தீர்மானித்து இருக்கிறது. ஆனால் எஸ்ஐஆர் பணியால் மம்தாவின் ஓட்டு வங்கியான இந்த 6 மாவட்டங்களிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்னும் சொல்லப்போனால் மேற்கு வங்கத்தின் 294 சட்டமன்றத் தொகுதிகளில் தொகுக்கப்பட்ட தரவு அடிப்படையில் எஸ்ஐஆர் பணியால் பாதிக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை, நீக்கப்பட்டவர்கள் மற்றும் ஆய்வுக்கு உட்பட்டவர்கள், 2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்கு அடிப்படையில் பார்க்கும்போது சட்டப்பேரவை தொகுதிகளில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெற்ற வெற்றி வித்தியாசத்தை விட அதிகமாக உள்ளது. இது திரிணாமுல் காங்கிரசுக்கும், மம்தாவுக்கும் நிச்சயம் பெரிய தலைவலி தான்.

Tags : SIR ,Mamata ,West Bengal ,
× RELATED தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்: குடியரசுத் தலைவர் உத்தரவு