- கவர்னர்
- ஆர்.என்.ரவி
- மேற்கு வங்கம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கேரளா
- ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர்
- புது தில்லி
* கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழகம் கூடுதல் பொறுப்பு
* 5 கவர்னர்கள் அதிரடி மாற்றம் 3 கவர்னர்கள் புதிதாக நியமனம்: மேற்கு வங்க கவர்னர் ராஜினாமா
புதுடெல்லி: பல்வேறு மசோதாக்களை நிறுத்தி வைத்து குளறுபடி செய்து வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடியாக மாற்றப்பட்டு, மேற்கு வங்க ஆளுநராக தூக்கியடிக்கப்பட்டுள்ளார். 5 மாநில ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 3 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழக ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா செய்துள்ளார்.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021 செப்.9 அன்று நியமிக்கப்பட்டு செப்.18 அன்று பதவி ஏற்றார். அன்று முதல் அவர் தமிழ்நாடு அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். பல மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்தார். உச்ச நீதிமன்றம் சென்று தமிழ்நாடு அரசு 10 மசோதாக்களுக்கு அனுமதி வாங்கியது. அதே போல் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை படிக்காமல் வெளிநடப்பு செய்து வருகிறார். இவரது பதவிக்காலம் முடிந்தும் நீட்டிக்கப்பட்ட நிலையில், ஆளுநர் ரவியை மாற்ற வேண்டுமென தமிழகம் முழுவதும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.
ஆனாலும் குளறுபடி மேல் குளறுபடிகளை செய்யும் ஆர்.என்.ரவி தொடர்ந்து ஆளுநர் பதவியிலேயே இருக்கட்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி வந்தார். ஆர்.என்.ரவி இருந்தால் தான் பாஜவின் உண்மையான முகம் தமிழக மக்களுக்கு தெரியவரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி வந்தார். ஆனால், சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஆர்.என்.ரவி ஏற்படுத்திய குழப்பங்களால் பாஜ கட்சிக்கு தமிழக மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்பட்டது. இதனால் அவர் மீது அதிருப்தி அடைந்த பாஜ மேலிடம் ஆர்.என்.ரவியை மாற்ற முடிவு செய்தது.
இதற்கிடையே, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பல்வேறு மாநில ஆளுநர்கள் மாற்றப்பட இருப்பதாக நேற்று காலையில் தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில், மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் திடீரென நேற்று மாலை தனது பதவியை ராஜினாமா செய்ததாக அறிவித்தார்.
அவரது பதவிக்காலம் முடியும் முன்பு அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேற்குவங்கத்திலும் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவரது ராஜினாமா பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் 2022 நவம்பர் 17 அன்று மேற்குவங்க ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதுபற்றி சி.வி. ஆனந்த போஸ் கூறுகையில், ‘ஆம், நான் ராஜினாமா செய்துவிட்டேன். நான் மூன்றரை ஆண்டுகளாக வங்காள ஆளுநராக இருக்கிறேன்; அது எனக்குப் போதுமானது’ என்றார்.
இருப்பினும், அவர் திடீரென ராஜினாமா செய்ததற்கான காரணத்தை வெளியிடவில்லை. சி.வி. ஆனந்த போஸ் பதவி விலகியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஆளுநரும் முன்னாள் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான ஆர்.என். ரவி, மேற்கு வங்கத்தின் கூடுதல் பொறுப்பை வகிப்பார் என்பதை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். இந்நிலையில், ஆனந்த போஸின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில ஆளுநர்களை மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டார்.
3 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார். அதன்படி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவில் ஆளுநராக உள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூடுதலாக தமிழக ஆளுநர் பொறுப்பை கவனிப்பார். கேரளாவில் அம்மாநில அரசுக்கு பல்வேறு குடைச்சல்கள் கொடுத்து வந்த ஆளுநர் ஆரிப் முகமது கானுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி புதிய ஆளுநராக விஸ்வநாத் அர்லேகர் பொறுப்பேற்றார். இனி இவர் தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்க உள்ளார்.
இதுதவிர, இமாச்சல் ஆளுநராக இருந்த சிவபிரதாப் சுக்லா தெலங்கானா மாநில ஆளுநராகவும், தெலங்கானா ஆளுநராக இருந்த ஜிஷ்ணு தேவ் வர்மா, மகாராஷ்டிரா மாநில ஆளுநராகவும், லடாக் துணை நிலை ஆளுநர் கவிந்தர் குப்தா இமாச்சல் ஆளுநராகவும், டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சோனா லடாக் துணை நிலை ஆளுநராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதுதவிர, நாகலாந்து ஆளுநராக நந்த் கிஷோர் யாதவும், பீகார் ஆளுநராக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சயீத் அடா ஹஸ்னைனும், டெல்லி துணை நிலை ஆளுநராக தரண்ஜித் சிங் சாத்துவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 5 மாநில தேர்தல்கள் நெருங்கும் நிலையில் ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* அமித்ஷாதான் காரணம் மம்தா பரபரப்பு புகார்
மேற்குவங்க ஆளுநர் ராஜினாமா குறித்து முதல்வர் மம்தா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’ மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸின் திடீர் ராஜினாமா செய்தியால் நான் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளேன். அவரது ராஜினாமாவுக்கான காரணங்கள் தற்போது எனக்குத் தெரியவில்லை. இருப்பினும், தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, சில அரசியல் நலன்களுக்காக ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சரிடமிருந்து சில அழுத்தங்களுக்கு ஆளாகியிருந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.
மேற்கு வங்க ஆளுநராக ஆர். என். ரவி நியமிக்கப்படுவதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் எனக்குத் தெரிவித்தார். இது தொடர்பாக நிறுவப்பட்ட மரபுப்படி அவர் என்னிடம் ஒருபோதும் கலந்தாலோசிக்கவில்லை. இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்பின் உணர்வைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன, மேலும் நமது கூட்டாட்சி அமைப்பின் அடித்தளத்தையே பாதிக்கின்றன. கூட்டுறவு கூட்டாட்சி கொள்கைகளை மத்திய அரசு மதிக்க வேண்டும், மேலும் ஜனநாயக மரபுகளையும் மாநிலங்களின் கண்ணியத்தையும் சிதைக்கும் ஒருதலைப்பட்ச முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
* யாரிந்த அர்லேகர்?
கோவாவைச் சேர்ந்தவர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர். பாஜ கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். கோவா சட்டப்பேரவையின் சபாநாயகராகவும் (2012-2015), அம்மாநில அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இதற்கு முன்பு இமாச்சலப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களின் ஆளுநராகப் பணியாற்றியுள்ளார். தற்போது கேரள ஆளுநராக இருந்து வருகிறார். மாநில அரசுக்கு பல்வேறு இடைஞ்சல்களை ஏற்படுத்தி வந்த ஆரிப் முகமது கானுக்கு பிறகு ஆளுநராக அர்லேகர் பதவியேற்ற பின் கேரள அரசுடன் சுமூகமான உறவை பின்பற்றி வருகிறார்.
* யார், யார் மாற்றம்?
* தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* கேரள ஆளுநர் அர்லேகருக்கு கூடுதலாகத் தமிழக ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
* இமாச்சலப் பிரதேச ஆளுநர் சிவபிரதாப் சுக்லா, தெலங்கானா ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.
* தெலங்கானா ஆளுநராக இருந்த ஜிஷ்ணு தேவ் வர்மா, மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* டெல்லியின் துணை நிலை ஆளுநராக இருந்த வினய் குமார் சக்சேனா, லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.
* டெல்லியின் புதிய துணை நிலை ஆளுநராக தரஞ்சித் சிங் சாந்து நியமிக்கப்பட்டுள்ளார்.
* நாகலாந்து மாநில ஆளுநராக நந்த் கிஷோர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
* பீகார் ஆளுநராக சயீத் அடா ஹஸ்னைன் நியமிக்கப்பட்டுள்ளார்.
* இமாச்சல் ஆளுநராக கவிந்தர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
