×

ராணுவ மோதலால் எதையும் தீர்க்க முடியாது மேற்கு ஆசியா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப்பை சந்தித்த பிரதமர் மோடி, ராணுவ மோதலால் எந்த பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது என்றும், மேற்கு ஆசியா, உக்ரைன் போர்களை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் 4 நாள் பயணமாக முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். அவரது பயணத்தின் 2ம் நாளான நேற்று, டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை, அதிபர் ஸ்டப் சந்தித்து பேசினார்.

இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு, விண்வெளி, செமிகண்டக்டர்கள் மற்றும் முக்கிய கனிமங்கள் போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையே மேற்கு ஆசியாவில் நடக்கும் போர், உக்ரைன் போர் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவும் பின்லாந்தும் சட்டத்தின் ஆட்சி, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளன.

ராணுவ மோதலின் மூலம் எந்த பிரச்னைகளையும் தீர்க்க முடியாது என்பதில் நாங்கள் உடன்பட்டுள்ளோம். அது உக்ரைனாக இருந்தாலும் சரி, மேற்கு ஆசியாவாக இருந்தாலும் சரி. மோதல்களை விரைவாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அமைதிக்கான ஒவ்வொரு முயற்சிக்கும் நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம். அதிபர் ஸ்டப்பின் பயணம் இந்தியா, பின்லாந்து இடையே ஏஐ, 6ஜி, சுத்தமான எரிசக்தி மற்றும் குவாண்டம் கணினி உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு வடிவம் கொடுத்துள்ளது’’ என்றார்.

பின்லாந்து அதிபர் ஸ்டப் கூறுகையில், ‘‘போரை முடிவுக்குக் கொண்டுவருவது அனைவரின் நலன்களுக்கும் உகந்தது என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடத்திற்கான இந்தியாவின் முயற்சியை நாங்கள் ஆதரிக்கிறோம். தற்போதைய சூழலில் இது அவசியமான ஒன்றாகும்’’ என்றார்.

* பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசியில் பேச்சு
ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி கடந்த இரு நாட்களில் தொலைபேசியில் பேசிய நிலையில் நேற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் தொலைபேசியில் உரையாடினார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘இன்று என் நண்பர் மேக்ரானுடன் பேசினேன்.

மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழ்நிலை மற்றும் பேச்சுவார்த்தை, ராஜதந்திரத்திற்கு திரும்ப வேண்டியதன் அவசியம் குறித்து எங்கள் பொதுவான கவலைகளை பற்றி விவாதித்தோம். பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து ஒருங்கிணைந்து மேற்கொள்வோம்’’ என்றார்.

Tags : West Asia ,Ukraine ,PM Modi ,New Delhi ,Modi ,President ,Alexander Stubbs ,India ,Finland… ,
× RELATED பல்வேறு மசோதாக்களை நிறுத்திவைத்து...