மானாமதுரை: மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் பைக்குகளில் வந்த 9 பேர் கும்பல், பட்டியல் சமூக மக்கள் மீது அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்திய வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கோழி ராசு (45). இவர், கடந்த 3ம் தேதி முத்தனேந்தல் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தார். அப்போது பாரில் மது அருந்திக்கொண்டிருந்த செட்டிகுளத்தைச் சேர்ந்த பாண்டியராஜ், புதுக்குளத்தைச் சேர்ந்த மகேஷ் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனை பார்த்த ராசு இருவரையும் கண்டித்துள்ளார். இதையடுத்து மகேஷ் அன்று நள்ளிரவு புதுக்குளத்தை சேர்ந்த 8 பேருடன் 3 டூவீலரில் இடைக்காட்டூர் மேலத்தெருவில் உள்ள தாய்மாமன் வீட்டில் இருந்த பாண்டியராஜை தேடி வந்துள்ளார். அங்கு அவர் இல்லாததால், அங்கு நின்றிருந்த ராசுவை பார்த்து “இவர்தான் என்னை கண்டித்தவர், பிரச்னைக்கு இவர்தான் காரணம்” என்று மகேஷ் கூறியதும், அவருடன் வந்தவர்கள் ராசுவை தாக்கியுள்ளனர்.
அவர் தப்பியோட முயன்றபோது, 3 டூவீலர்களில் துரத்தி வந்து ராஜூ வசிக்கும் தெருவிற்குள் புகுந்து கண்ணில் பட்ட நபர்கள் அனைவரையும் வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியுள்ளனர். இதில் தெருவில் நின்றிருந்த தினேஷ், ராஜேந்திரன், சுப்ரமணியன் மற்றும் சில பெண்கள் என பலருக்கும் காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அங்கு வந்தவர்களையும், தடுக்க முயன்றவர்களையும் அந்த கும்பல் சரமாரியாகத் தாக்கியது.
இதில் காயமடைந்த ராசு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானத இதனால், அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். புகாரின்பேரில் மானாமதுரை போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம், வீடுகளை சேதப்படுத்தியதாக வழக்குப்பதிந்து வி.புதுக்குளத்தை சேர்ந்த இருளப்பன் (31), பாலமுருகன் (22), வேல்முருகன் (20), பாரதி (19) மற்றும் 18 வயது சிறுவன் என 5 பேரை கைது செய்து, மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.
* எஸ்.பி விளக்கம்
சம்பவம் குறித்து சிவகங்கை எஸ்பி சிவபிரசாத் நேற்று மாலை நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்த சம்பவம் முழுக்க முழுக்க இருவருக்குள் ஏற்பட்ட தகராறு தான். எந்த சாதிய வன்கொடுமையும் நடந்ததாக விசாரணையில் தெரியவில்லை. தாக்கப்பட்டவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் சட்டப்படி சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.
