- நாங்குநேரி
- திருமாவளவன்
- Kalakkadu
- பெரும்பத்
- நெல்லை மாவட்டம்
- ஜான்
- பெரும்பது இந்திரா காலனி
- திரிநாத் கட்டா
- ஒடிசா
களக்காடு: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்தில் கடந்த 2ம் தேதி இரவில் ஒரு கும்பல் பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொடூர தாக்குதலில் பெரும்பத்து இந்திரா காலனியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜான், ஒடிசா மாநில தொழிலாளி திரிநாத் கட்டா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜானின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அவரது உடலை வாங்க நேற்று 4வது நாளாக மறுப்பு தெரிவித்து வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பலியான ஜான் குடும்பத்தினருக்கும், வட மாநில தொழிலாளி திரிநாத் கட்டா குடும்பத்தினருக்கும் நேற்று நேரில் சென்று ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பத்து, இந்திரா காலனி கிராம மக்களை சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘நாங்குநேரி சம்பவத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். இதுபோல சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூரிலும் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதிலும் பலர் காயமடைந்துள்ளனர். இதற்கு பின்னனி என்ன என்பது விளங்கவில்லை. ஜான் மற்றும் வடமாநில தொழிலாளி ஆகியோர் சாதி, மத, அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். எந்த முன்விரோதமும் இல்லை.
தென் மாவட்டங்களில் போதை பழக்கம் அதிகரித்துள்ளதாக போலீசாரே தெரிவித்துள்ளனர். போதை பழக்கத்தால் படுகொலை நடந்ததா? அல்லது இதில் அரசியல் காரணங்கள் இருக்கிறதா என கண்டறிய வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் சதி நோக்கில் தாக்குதல் நடத்தப்பட்டதா? என்றும் விசாரிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு போதிய நிதியுதவியும், ஜானின் மனைவிக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். ஜான் குடும்பத்தினருக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு வழங்கியது போன்று வடமாநில தொழிலாளர் குடும்பத்திற்கும் வீடு வழங்க வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடைய யாராக இருந்தாலும் அனைவரையும் கைது செய்ய வேண்டும்’ என்றார்.
