×

சொந்த வீடு உண்டா? இல்லையா?

ஜோதிடத்தில் நான்காம் பாவம் மிக முக்கியமானது. மோட்ச திரிகோண பாவம் என்று சொல்லப்படும் 4,8,12 ஆகிய பாவங்களில், முதல் மோட்ச திரிகோண பாவம் நான்காம் பாவம். நான்காம் பாவத்துக்கு பாக்கியஸ்தானமாக அதாவது ஒன்பதாம் இடமாக அமைவதுதான் 12 ஆம் பாவம். ஒரு ஜனனத்தின் நோக்கம், அதன் மரணத்தில் தெரிந்துவிடும். நான்காம் பாவத்தின் சிறப்பு, பன்னிரண்டாம் பாவத்தில் புரிந்துவிடும். பன்னிரண்டாம் பாவத்தின் புண்ணிய பாவமாக, நான்காம் பாவம் அமைவதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஜோதிட சாஸ்திரத்தில், நான்காம் பாவத்தை சுகஸ்தானம் என்று சொல்வார்கள். மனிதனின் உள்ளார்ந்த வாழ்க்கையைக் குறித்தும், அவன் மன அமைதியுடன் வாழ்வானா என்பதைக் குறித்தும், குடும்ப சூழல்களைக் குறித்தும் தெளிவாகச் சொல்வது நான்காம் பாவம்.

நான்காம் பாவம் குறிக்கும் மிக முக்கியமான விஷயங்கள்:

1. ஒருவனுக்கு சொந்த வீடு அமையுமா?
2. அவருக்கு நிலம், பண்ணை, தோட்டங்கள் இருக்கிறதா?
3. நிலம் வாங்குதல் அல்லது விற்றல் முதலிய விஷயங்கள் வாழ்வில் நடக்குமா?

முதலிய விஷயங்கள் எல்லாம், நான்காம் பாவத்தில் உள்ள பொருள் காரகத்துவங்கள். நான்காம் பாவம் மிக முக்கியமான உயிர்காரகத்துவம், தாய் மற்றும் தாய் வழி உறவுகள். தாயாரின் உடல்நிலை, அவருடைய குணங்கள், தாயுடன் ஜாதகருக்கு உள்ள உறவு, தாய் வழி சொத்து, தாய் வழி சொந்தங்களின் ஆதரவு குறித்து, நான்காம் பாவம் தெளிவாகக் காட்டிவிடும். நான்காம் பாவம் எப்பொழுதும் ஒரே நிலையில் இயங்கிக் கொண்டே இருப்பதைக் காட்டுவது. அதனால்தான் நுரையீரல், இருதயம், சிறுநீரகம் முதலிய உறுப்புகளை நான்காம் பாவம் சுட்டுவதாகச் சொல்வார்கள். காரணம், இருதயம் இயங்கிக் கொண்டே இருக்கிறது. சிறுநீரகமும் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை இயங்கிக் கொண்டே இருக்கிறது. நான்காம் பாவம் சுகஸ்தானம். வண்டி, வாகனம், ஆள் பலம், வீட்டில் உள்ள சுகஸ்தானத்திற்குரிய பொருட்கள் முதலியவற்றையெல்லாம் நான்காம் பாவம் குறிக்கிறது. ஒருவருடைய கல்வி நிலையைத் தெரிந்து கொள்வதற்கும், நான்காம் பாவம் உதவும். கல்வி எப்படி அமையும் என்பதை, நான்காம் பாவத்தை கொண்டுதான் அறிய வேண்டும்.

நீண்ட பயணம் 11 ஆம் பாவம் மற்றும் ஒன்பதாம் பாவம். இதற்கு ஆறாம் பாவமாகவும், எட்டாம் பாவமாகவும், நாலாம் பாவம் அமைந்து விடுவதால், நாலாம் பாவம் என்பது ஒரே இடத்தில் இடமாற்றம் இல்லாமல் இருப்பதைக் குறிக்கிறது.ஒருவர் ஊர் விட்டுச் செல்வாரா? சொந்த ஊரிலேயே கடைசி வரை இருப்பாரா? என்பதைத் தெரிந்து கொள்வதற்கு, நான்காம் பாவத்தைக் கவனிக்க வேண்டும். ஆனால், நான்காம் பாவத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவர் உள்ளூரில் இருப்பாரா? வெளியூரில் இருப்பாரா? வெளிநாட்டில் இருப்பாரா என்பதை தெரிந்து கொள்ள முடியாது.

காரணம், ஜோதிட சாஸ்திரம் விசித்திரமானது. ஒன்றோடு ஒன்று பிணைந்து இருப்பது. நான்காம் பாவம் ஒன்பதாம் பாவத்தோடும் பன்னிரண்டாம் பாவத்தோடும் பதினோராம் பாவத்தோடும் வலிமையாகத் தொடர்பு கொண்டால், அவர் உள்ளூரில் இல்லாமல் வெளியூரில் இருப்பார். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வார். நான்காம் பாவத்தின் பலன் பின்வரும் அம்சங்களை அடிப்படையாகக் கொண்டுதான் பார்க்க வேண்டும்.

1. நான்காம் பாவத்தில் என்னென்ன கிரகங்கள் இருக்கின்றன?
2. நான்காம் பாவத்துக்குரிய கிரகம் எந்த இடத்தில் இருக்கிறது, அதனுடைய வலிமை எப்படி இருக்கிறது?
3. நான்காம் பாவத்தோடும் நான்காம் பாவாதியோடும் தொடர்பு கொண்ட கிரகங்களின் நிலை என்ன?
4. சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற கிரகங்கள் பாதிப்பு, நான்காம் இடத்திற்கு இருக்கிறதா என்பதை எல்லாம் கவனித்து நான்காம் பாவத்தினுடைய பலன்களை நிர்ணயம் செய்ய வேண்டும்.

நான்காம் பாவம், நல்ல நிலையில் இருந்தால், ஒருவருக்குச் சொந்த வீடு இருக்கும். நிலம் இருக்கும்; வண்டி வாகனங்கள் இருக்கும், தாயாரோடு அன்பு கொண்டவராக இருப்பார். மன அமைதியும், சுக வாழ்வும் இருக்கும். நான்காம் பாவம் பாதிப்பு அடைந்திருந்தால், வீடு அமையாது. அப்படி அமைந்தாலும், அந்த வீட்டில் பல வில்லங்கங்கள் இருக்கும்.எப்பொழுதும் சொத்துத் தகராறு இருக்கும். தாயாரிடத்தில் அன்பு இருக்காது அல்லது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் பிரச்னையாக இருக்கும். எப்பொழுதும் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிய மனக்கவலை, சந்தோஷத்தைக் குறைக்கும். மன அழுத்தம் இருக்கும். அடிக்கடி இடமாற்றம் இருந்து கொண்டிருக்கும். நான்காம் பாவம், எட்டாம் பாவத்தோடு தொடர்பு கொண்டு, சனி செவ்வாய் கிரகங்களுடைய சேர்க்கை பார்வையைப் பெற்றிருந்தால், தசாபுத்தி கோள்சாரம் சரியில்லாத நேரங்களில், விபத்துக்கள் நடப்பதற்கான சாத்தியங்களும் உண்டு.

நான்காம் பாவம் என்பது இயற்கையான அழகைக் குறிப்பது. ஐந்தாம் பாவம் என்பது ஒப்பனையோடு கூடிய அழகைக் குறிப்பது. ஐந்தாம் பாவத்திற்கு, பன்னிரெண்டாம் பாவம் நான்காம் பாவம் என்பதால், நான்காம் பாவம் நன்றாக இருப்பவர்கள் ஒப்பனையை விரும்ப மாட்டார்கள். எப்பொழுதும் இயல்பாக இருப்பதையே விரும்புவார்கள். ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்பார்கள். அதிலே அவர்களுக்கு அலுப்பும் சலிப்பும் இருக்காது. ஒருவர் பதினாறு வயதினிலே மளிகை கடைக்குச் சென்றார். மளிகை சாமான்களைப் பொட்டலம் கட்டி கொடுக்கக்கூடிய வேலை அவருக்கு. கிட்டத்தட்ட 60 வயது வரை அந்த வேலையைத் தவிர வேறு எந்த வேலைக்கும் அவர் செல்லவில்லை. கடையையும் மாற்றவில்லை. காரணம், இங்கே நான்காம் பாவம் அவரை வேறு இடத்திற்குச் செல்லவிடாமல் தடுக்கிறது என்று பொருள். மூதாதையர்கள் மூலம் அடைகின்ற சொத்து, நீர் நிலை, கல்லறை முதலிய விஷயங்களை எல்லாம் நான்காம் பாவம் குறிக்கும். கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறையில், நான்காம் பாவம் தந்தையின் உடல்நிலை, கடன் (9ம் பாவத்திற்கு ஆறாம் பாவம்) வீடு, சொத்து, புதையல் முதலிய விஷயங்களைக் குறிக்காட்டும்.

நான்காம் பாவம் மிகவும் வலிமை அடைந்து, ஐந்தாம் பாவம் வலிமை குறைந்திருந்தால், அவர்களுக்குப் பிள்ளைகள் பிறப்பதில் சில தடைகளும் தாமதங்களும் இருக்கும்.காரணம், ஐந்தாம் பாவம் என்பது பிள்ளைச் செல்வத்தைக் குறிப்பது. அதனுடைய 12 ஆம் பாவம் நான்காம் பாவமாக அமைவதால், இப்படியும் சிலர் ஜாதகங்களில் அமைந்து விடுவது உண்டு. ஆனால், இவைகள் எல்லாம் பொதுவான விஷயங்கள். நான்காம் பாவம் அல்லது ஐந்தாம் பாவம் மட்டுமே இதைத் தீர்மானிப்பது கிடையாது. நான்காம் பாவாதிபதியினுடைய நிலை, ஐந்தாம் பாவாதி பதியினுடைய நிலை, குழந்தைக்குக் காரக கிரகமாகிய குருவினுடைய நிலை என எல்லாவற்றையும் இணைத்துத்தான் இந்த பாவத்தினுடைய முடிவைச் சொல்ல வேண்டும்.

Tags :
× RELATED தான்தோன்றி பெருமாளும் அனுமாரும்!