×

தான்தோன்றி பெருமாளும் அனுமாரும்!

கரூரில், தான்தோன்றிப் பெருமாள் பிரசித்தம். திருப்பதி பெருமாள் போலவே, “தான்தோன்றி’’ என்னும் மலையின் மீது, “ஸ்ரீ கல்யாண வெங்கட்டரமண சுவாமி’’ என்னும் திருநாமத்தில், பக்தர்களுக்கு சேவைசாதித்து வருகிறார். இவர் அருகிலேயே அதாவது துவாரபாலகர்கள் இருக்கும் இடத்திற்கு அருகில், மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன் இருப்பதாக நம்பப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் சரிவரை கிடைக்கவில்லை என்றாலும், பெருவாரியான மத்வ சம் மக்களாலும், ஸ்ரீ வியாசராஜ மடத்தினராலும் நம்பப்படுகிறது. முதலில், “தான்தோன்றி மலை’’ எப்படி உருவானது, “கல்யாண வெங்கட்டரமண சுவாமி’’ எப்படி தோன்றினார் என்பதனை பற்றி பார்ப்போம்.

ஆதிசேஷனும் – வாயு பகவானும்

ஒரு சமயத்தில், பகவான் மகாவிஷ்ணு, ஏகாந்தமாக பாற்கடலில் சயனகோலத்தில் இருந்தபோது, வாயு பகவான் அவரை சேவிப்பதற்காக செல்கிறார். அப்போது, ஸ்வாமிக்கு காவலாக இருக்கும் ஆதிசேஷனானவர், “இப்போது ஸ்வாமியை தரிசிக்க இயலாது. அவர் ஏகாந்தத்தில் இருக்கிறார். ஆகையால், யாருக்கும் அனுமதிஇல்லை’’ என்று வாயு பகவானை தடுக்கிறார். “இல்லை.. நான் எப்போது வேண்டுமானாலும், பெருமாளை தரிசிக்கலாம். எனக்கு எந்நேரமும் அவரை காண அனுமதி உண்டு’’ என்று வாயு பகவான் வாதாடுகிறார். வாதம் முற்றி, வாக்குவாதங்களாக மாறுகிறது. சத்தத்தை கேட்டு, சயனக்கோலத்தை விட்டு வெளியே வந்த பெருமாள், இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்தார். என்னவெல்லாம் சொல்லிப்பார்த்தும், இருவரும் சமாதானம் அடைவதாக தெரியவில்லை. அப்போது ஸ்வாமி;“பூலோகத்தில், ஏழுமலை என்று சொல்லக் கூடிய “சப்தகிரி’’ (ஏழு) மலையில், `மேருமலை’ என்னும் பர்வதம் இருக்கிறது. அந்த பர்வதத்தை ஆதிசேஷன், தனது முழு பலத்தைக் கொண்டு, நன்கு சுற்றிக் கொள்ள வேண்டும். அதே போல் வாயு பகவான், தனது முழு பலத்தைக் கொண்டு, சுற்றிக் கொண்ட ஆதிசேஷனை விடுவிக்க வேண்டும். இதில், யார் வெற்றிப் பெறுகிறார்களோ, அவர்களின் வாக்கே முதன்மையானது’’ என்று கூறினார்.

மஞ்சள் உடையில் பக்தர்

அதன்படி ஆதிசேஷனானவர், மேருமலையை நன்கு சுற்றிப் பிடித்துக் கொள்கிறார். வாயுவானவர், தனது முழு பலத்தையும் பிரயோகம் செய்து, காற்றின் வேகத்தை பலப்படுத்துகிறார். இருந்த போதிலும், மலையை இருக்கி ஆதிசேஷன், சுற்றிப்பிடித்துக்கொண்டிருக்கிறார். வாயு பகவானும் விடவில்லை. காற்றை இன்னும் வீசுகிறார். ஒரு கட்டத்தில், மேருமலை உடைந்து, நாளா பக்கமும் சிதறி விழுகிறது. அப்படி சிதறிய ஒரு பகுதியே இந்த “தான்தோன்றி’’ மலை.இப்போது, தான்தோன்றி மலையில் எப்படி பெருமாள் தோன்றினார் என்பதை பற்றி பார்ப்போம்.முன்னொரு காலத்தில், குண்டலாச்சாரி என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் தீவிர சிவன் பக்தர். குண்டலாச்சாரி, சோழ பேரரசரின் தலைமை சிற்பி ஆவார். இவருக்கு சுந்தராம்பாள் என்னும் மனைவி. இந்த தம்பதியினருக்கு நீண்ட காலமாக குழந்தைபேறு இல்லாமல், மனவருந்தி வாழ்ந்து வந்தார்கள்.ஒரு நாள், இவர்களின் வீட்டு வாசலில், மஞ்சள் உடைகளை அணிந்துக் கொண்டு, கோவிந்த நாமத்தை கூறியபடியே, கூட்டம் கூட்டமாக பலரும் சென்றுக் கொண்டிருந்தார்கள். இதனை, வீட்டு வாசலில் இருந்து, சுந்தராம்பாள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சுந்தராம்பாளின் வேண்டுதல்

அப்போது, சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை அழைத்த சுந்தராம்பாள்;“அனைவரும் கூட்டம் கூட்டமாக எங்கு சென்றுக் கொண்டிருக்கிறீகள்?’’ என்று கேட்டாள். “பலரும் அவரவர் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக திருமலைக்கு சென்றுக் கொண்டிருக்கிறோம். நானும் என் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக திருமலை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. குழந்தை பாக்கியம் வேண்டி, எனக்கு நல்ல படியாக குழந்தை பிறந்தால், குழந்தையோடு உன் சந்நதிக்கு வருகிறேன் என்று திருமலையில் கோயில் கொண்டிருக்கும், வேங்கடவனை வேண்டிக்கொண்டேன். அதன் பிறகு, கூடிய விரைவிலேயே எனக்கு அழகான குழந்தை பிறந்தது. ஆகையால், வேண்டியபடி குழந்தையுடன் திருமலைக்கு சென்றுக் கொண்டிருக்கிறேன்’’ என்று கூறிவிட்டு சென்றார், அந்த பெண்மணி. சுந்தராம்பாலும், “திருவேங்கட முடையானே.. எனக்கும் குழந்தை பாக்கியத்தை கொடு. நானும் இதே போல், பிறக்கும் என் குழந்தையோடு திருமலைக்கு வருகிறேன்’’ என்று வேண்டிக் கொள்கிறார். அந்த பிரார்த்தனைக்கு செவி சாய்த்த திருமலைவாசன், குண்டலாச்சாரி – சுந்தராம்பாள் தம்பதிக்கு மழலை செல்வத்தை அருளினார்.

குன்றில் குடைவரை உருவாகுதல்

அக்குழந்தைக்கு “டங்கணாச்சாரி’’ என்று பெயர் வைத்தனர். தன் அப்பாவை போலவே, டங்கணாச்சாரியும் சிறுவயது முதலே சிற்பக் கலையில் சிறந்து விளங்கினான். இப்படி இருக்க.. ஒரு நாள் சுந்தராம்பாள் சோகத்தோடு காணப்படுகிறார். இதை கவனித்த டங்கணாச்சாரி;“அம்மா.. ஏன் சோகமாக இருக்கிறீர்கள்?’’ என்று கேட்டான்.“எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க, திருப்பதி ஏழுமலையானை வேண்டிக் கொண்டேன். உடனே நீ பிறந்துவிட்டாய். வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டும். உன் அப்பாவோ சிவன் பக்தர். ஆகையால், என்ன செய்வதென்றே தெரியவில்லை’’ என தன் மகனிடம்கூறி வருந்தினாள்.“நீ.. கவலைப்படாதே அம்மா.. நாம் கடவுளை தேடி போகவில்லை என்றால் என்ன..! பெருமாளையே நம்மை தேடி வரவைக்கிறேன்’’ என்றுகூறி, டங்கணாச்சாரி தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு, குன்று (தான்தோன்றி மலை) இருக்கும் இடத்திற்கு வருகிறான். குன்றை, குடைவரையாக மாற்றுகிறான். தினமும் ஒவ்வொரு இடமாக தயார் படுத்திக் கொண்டே இருக்கிறான். இதை பார்த்த ஊரில் ஒருவர், அரசனிடம் சென்று;“மன்னா.. வைணவ சின்னத்தோடு குன்று ஒன்று உருவாகிக்கொண்டிருக்கிறது. நாம் சைவர்கள். நம்முடைய தேசத்தில், அனுமதியில்லாமல் இப்படி விஷ்ணுவின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட வைணவ கோயில் உருவாகிறது’’ என்று புகார் கொடுக்க, உடனே தலைமை சிற்பியான குண்டலாச்சாரியை அழைத்து,“எனது தேசத்தில் வைணவ தலமா? யாராக இருந்தாலும் சரி. கைது செய். முடியவில்லை என்றால், அவர்களின் தலையினை கொய்து கொண்டுவா’’ என்று உத்தரவிடுகிறார்.

மகன் என தெரியாமல்

மன்னனின் ஆணைக்கு இணங்க, குண்டலாச்சாரி குன்று இருக்கும் இடத்திற்கு செல்கிறார். குன்று, குடைவரையாக மாறிவருவதை கண்டு சினம் கொள்கிறார். கோவமாக குன்றின் உள்ளே செல்கிறார். கண்களே தெரியாத அளவிற்கு இருட்டாக இருந்தது. யாருக்கும் தெரியாமல், டங்கணாச்சாரி உளியை வைத்து குன்றை செதுக்கிக் கொண்டிருந்தார்.குண்டலாச்சாரியும், அமைதியாக ஒவ்வொரு கால்களையும் மெதுவாக வைத்து, உளி கேட்கும் திசையை நோக்கி சென்றார். குண்டலாச்சாரி அருகில் செல்லசெல்ல, உளியின் சத்தம் காதில் அதிகரிக்கிறது. தோராயமாக கணக்கிட்டு, தனது வாளை மெதுவாக எடுத்து, ஒரே சீவு சீவினார். டங்கணாச்சாரியின் தலை உருண்டோடியது. தலை தனியாக, உடல் தனியாக கொலை செய்யப்பட்டு கிடந்தான். தலையையும், உடலையும் குன்றின் வெளியே எடுத்து வரும்போதுதான், தன் மகனையே, தான் கொன்றது தெரியவருகிறது. தலையையும் உடலையும் குண்டலாச்சாரி, வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார். உடலை பார்த்து, சுந்தராம்பாள் கதறி அழுகிறாள்.

வேங்கடவனை வேண்டிக்கொண்டு பெற்றெடுத்த செல்வன் ஆயிற்றே! அவ்வளவு எளிதில் விட்டுவிடுவானாயென்ன? நாரத மகரிஷியின் மூலமாக, டங்கணாச்சாரியை மீண்டும் உயிர்பித்து கொடுக்கிறார், வேங்கடவன்.“குண்டலாச்சாரியாரே… கவலை வேண்டாம். ஒரே ஒரு துளசி இலையை கொண்டுவந்து, வேங்கடவனை நன்கு வேண்டிக்கொண்டு, துளசி இலையை உன் புதல்வனின் உடல் மீது வைக்கவும். அவன் உயிர்பித்து விடுவான்’’ என்று நாரதரின் அசரீரி கேட்கிறது. மகிழ்ச்சி அடைந்த குண்டலாச்சாரி, வேகவேகமாக துளசியை பறித்து, “வேங்கடவனே…. நீ கொடுத்த பிரசாதம்தான் என் குழந்தை. இவன் உன்னுடையவன். இவனை மீண்டும் உயிர்ப்பித்து கொடு’’ என்று மனமுருகி வேண்டி, துளசியை டங்கணாச்சாரியின் மீது இடுகிறான். உடனே.. டங்கணாச்சாரி, உயிர் பெற்று விடுகிறான்.

இங்கேயே இருக்கும்படி வேண்டுதல்

இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மன்னனும், ஊர் மக்களும், டங்கணாச்சாரியிடத்தில் விசாரிக்கிறார்கள்.“எதற்காக குன்றில் வைணவ கோயிலை அமைக்கிறாய்?’’ என்று மன்னன் கேட்டார்.“அம்மாவிற்காக, இங்கேயே பெருமாள் கோயிலை எழுப்பி வருகிறேன்’’ என்று தன் அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக குன்றை குடைவரையாக மாற்றியதைக் கண்டு, அனைவரும் நெகிழ்ந்தார்கள். அந்த சமயத்தில், குன்றின் மேற்கு பகுதியில் ஒரு பிளவு ஏற்பட்டு, அங்கு ஜோதி சொரூபமாக பெருமாள் காட்சித் தந்தருளினார். இப்படிதான், கல்யாண வெங்கட்டரமண சுவாமி, தானாகவே தோன்றியதன் காரணமாக, இந்த மலைக்கு தான்தோன்றி மலை என்னும் பெயர் ஏற்பட்டது.கல்யாண வெங்கட்டரமண சுவாமியை கண்ட ஆனந்தத்தில், குண்டலாச்சாரியும் – டங்கணாச்சாரியும்;“எங்களுக்கு எப்படி நீங்கள் அருள் புரிந்தீர்களோ.. அதே போல், இங்கு நித்யம் எழுந்தருளி, பக்தர்களுக்கும் அருள் புரியவேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தனர். இவர்களின் பிரார்த்தனைக்கு மனம் இறங்கிய பெருமாள், பிரார்த்தனா மூர்த்தியாக, ஸ்ரீ கல்யாண வெங்கட்டரமண சுவாமியாக இன்று வரை கலியுகத்திலும், கேட்டதை கொடுத்து சேவைசாதித்து வருகிறார்!
(அடுத்த இதழில்…)

Tags : Karur ,Tirupathi Perumal ,Dandonri ,Sri Kalyana Venkataramana Swami ,Dwarpalakars ,Sri Vyasarajar ,
× RELATED சில சந்தேகங்களும் விளக்கங்களும் (ஏன்? ஏன்?)