சேத்துப்பட்டு, மார்ச் 4: சேத்துப்பட்டு இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் மாசி மாத பவுர்ணமியொட்டி ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இரவு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பச்சையம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் நடந்தது. இதில் சேத்துப்பட்டு, வேலூர், ஆரணி, போளூர், செஞ்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுவினர், கிராம மக்கள், இளைஞர்கள் செய்தனர்.
