1. முன்னுரை
ஒவ்வொரு தமிழ் மாதத்தின் அமாவாசையும், பௌர்ணமியும் வழிபாட்டுக்கும், விரதத்திற்கும், கோயில் உற்சவங்களுக்கும் உகந்த நாட்களாக இருக்கின்றன. மாசி மாதம் பௌர்ணமியை ஒட்டி, மக நட்சத்திரத்தில் நடைபெறும் நீராட்டம், “மாசி மகம்’’ என்று அழைக்கப்படுகிறது. அதுவும் மாசி மாதத்தில் வரும் அமாவாசையும், அமாவாசைக்கு முன்பு வரும் மகா சிவராத்திரியும், மாசி மாத பௌர்ணமியில் வரும் மாசிமக உற்சவமும் உலகப் பிரசித்தி பெற்றவை. இந்த ஆண்டு மாசி மக உற்சவம் பிப்ரவரி மாதம் 2-ம் தேதி சில கோயில்களிலும், பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி பெரும்பாலான கோயில்களிலும் நடைபெற இருக்கிறது. மாசி மகத்தின் பல்வேறு சிறப்புகளை முப்பது முத்துக்களாகக் காண்போம்.
2. சூரியனும் சந்திரனும் இணைந்து தரும் பண்டிகைகள்
நம்முடைய வாழ்வுக்கு மிக முக்கியமான இரண்டு விஷயங்கள் சூரியனும் சந்திரனும். ஒரு நாளின் இரண்டு அங்கங்கள் பகலும் இரவும். பகல் நேர ஒளிக்கு சூரியனும், இரவு நேர ஒளிக்கு சந்திரனும் பொறுப்பு ஏற்றுக் கொள்கின்றன. பகல் நேரத்தில் சூரியன் நேரடியாகவே தன்னுடைய ஒளியை பூமிக்கு வழங்குகிறான். இரவு நேரத்தில் சந்திரன் மூலமாக சூரியன் பூமிக்கு ஒளியை வழங்குகின்றான். எனவே இந்த இரண்டும் மிக முக்கியமானவை. பெரும் பாலான உற்சவங்களையும் விழாக்களையும் தீர்மானிப்பவை சூரிய சந்திர கதிகள்தான். இருவரும் ஒரே ராசியில் சேர்ந்தால் அமாவாசை. எதிரெதிரே பார்வையில் சேர்ந்தால் பௌர்ணமி.
3. மாசி மாதத்தின் சிறப்பு
மாதங்களைக் கணக்கிடும் பொழுது, சூரிய கதியை ஒட்டி, மாதங்களின் பெயர்களை நிர்ணயித்திருக்கிறார்கள். இதை சௌரமான முறை என்று சொல்வார்கள். கால சக்கர புருஷனுக்கு 11வது ராசி கும்பம். ஜோதிடத்தில் இதனை லாபஸ்தானம் என்று சொல்வார்கள். கும்பம் என்றாலே நீர் நிலைகளைக் குறிக்கும். (புனித நீர்… கும்பாபிஷேகம்) ஜோதிட சாஸ்திரத்தில் 5ஆவது ராசியான பூர்வபுண்ணிய ராசி சிம்ம ராசி ஆகும். சிம்ம ராசிக்கு உரிய கிரகம் சூரியன். ஆத்ம காரகனாகிய சூரியன் பதினோராம் ராசியான லாப ராசியில் இருந்து தனது ராசியான பூர்வபுண்ணிய ராசியைப் பார்க்கும் மாதம்தான் மாசி மாதம். சிம்ம ராசியில்தான் மக நட்சத்திரம் இருக்கிறது. சந்திரன் மக நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி திருநாளில் கொண்டாடப்படுகின்ற உன்னதமான விழா மாசி மக திருவிழாவாகும்.
4. தீர்த்தவாரி
சிம்ம ராசியில் குரு பகவான் வருகின்ற பொழுது கொண்டாடப்படும் திருநாள் மகாமக திருநாளாகும். இது 12 ஆண்டுக்கு ஒருமுறை வரும். மாசி மாதத்திற்கு மாகம் என்று பெயர். பௌர்ணமியில் மக நட்சத்திரம் சேருவதால் மாகம் என்று அழைக்கப்பட்டு பின் மகமாக மாறியது. பாவங்களைப் போக்கும் என்பதினால் மாகம் எனப்படுகிறது. பௌர்ணமி சில நேரங்களில் மக நட்சத்திரத்திலேயே வரும். சிலநேரங்களில் பௌர்ணமிக்கு அடுத்த நாளில் மக நட்சத்திரம் வரலாம். சில கோயில்களில் பௌர்ணமியை முக்கியமாகக் கருதி தீர்த்தவாரியை வைத்துக் கொள்வார்கள் சில கோயில்களில் மக நட்சத்திரம் இருக்கும் நாளை தீர்த்தவாரிக்குத் தேர்ந்தெடுப்பார்கள்.
5. திங்கள் கிழமையா?செவ்வாய்க் கிழமையா?
இந்த ஆண்டு மூன்றாம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8:00 மணி வரை மக நட்சத்திரம் இருக்கிறது. மாலை 5.52 வரை பௌர்ணமி இருக்கிறது. இதற்கு முதல் நாள் திங்கட்கிழமை (2.3.2026) காலை 8:20 முதல் மக நட்சத்திரம் ஆரம்பித்து விடுவதாலும், மாலை 6:30க்கு பின்னால் பௌர்ணமி வந்து விடுவதாலும் சில கோயில்களில் பௌர்ணமி பூஜை மற்றும் மாசி மகம் திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. மற்ற ஆலயங்களில், காலை தீர்த்த வாரியின் போது மக நட்சத்திரமும் பௌர்ணமியும் இணைந்து இருப்பதால் 3-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
6. மாசி மகமும், மஹாமகமும் வேறுபாடு என்ன?
குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு வருடம் இருப்பார். இப்பொழுது அவர் மிதுன ராசியில் இருக்கிறார். இவர் சிம்ம ராசியில், மக நட்சத்திரத்தில், சந்திரனோடு இணைந்து சூரியனைப் பார்க்கும் காலம் மகாமகம் என்று கொண்டாடப் படுகிறது. இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும். கடைசியாக 2016 பிப்ரவரி 22ல் நடைபெற்றது. அடுத்த மகாமகத் திருவிழா 09.03.2028 அன்று நடைபெற உள்ளது. புனித நதிகளான கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி, சரயு, தாமிரபரணி ஆகிய 9 நதிகளும், பிறர் பாவங்களைப் பெற்றுக்கொண்டதால் வந்த, தங்கள் பாவங்களை, இந்த நாளில் போக்கிக் கொள்வதால், மகாமக நீராட்டம் என்பது புனிதத்திலும் புனிதமாகக் கருதப்படுகிறது. ஒன்பது நதிகளும் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்ட ஊர் கும்பகோணம். போக்கிக் கொண்ட தீர்த்தம் மகாமக குளம் அல்லது மகாமக தீர்த்தம்.
7. பஞ்ச பூதங்கள் இணையும் மாசி மாதம்
கும்ப ராசி காற்று ராசி. சிம்ம ராசியில் சந்திரன் இருக்கும் காலம்தான் மாசி மகம் நடைபெறுகிறது. சந்திரன் நீர் தத்துவத்தைக் குறிக்கும் கிரகம். சந்திரன் இருக்கும் சிம்ம ராசி நெருப்பு ராசி. மாசி மகம் இந்த பூமியில்தான் நடைபெறுகின்றது எனும் பொழுது, பூமியாகிய மண் தத்துவம் வந்துவிடுகிறது. இந்த பூமிக்கு மேல்தான் ஆகாயம் இருக்கிறது என்பதால், ஆகாயத் தத்துவமும் வந்து விடுகிறது. பூமியின் மேல், ஆகாயத்திற்கு கீழ் நாம் உயிரோடு இருக்க காற்று அவசியம் (கும்ப ராசி); நீர் அவசியம் (சந்திரன்); நெருப்பு அவசியம் (சிம்ம ராசியும், சூரியனும்); இத்தனைத் தொடர்புகளும் மாசி மக தீர்த்தவாரியில் கிடைத்து விடுகிறது.
8. மாசி மகமும் சந்திர கிரஹணமும்
பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நேரடியாக வரும்போது, அதன் நிழல் நிலவின் ஒளியை மறைக்கிறது. இதுவேசந்திர கிரகணம். எப்போதுமே சந்திர கிரகணம் பௌர்ணமி நாளில் நடைபெறும். இந்த ஆண்டு மாசிமகம் அன்று இரண்டு சிறப்புகள் இருக்கின்றன. இரண்டும் வானியல் நிகழ்வுகள். வேறு ஆண்டுகளில் காணாத அதிசயங்கள். முதலில் மாசி மகம் நடைபெறும் மூன்றாம் தேதி (3.3.26) சந்திர கிரகணம் வருகிறது. இந்த ஆண்டில் மாசி மாதத்தில் 15 நாட்களுக்கு முன் சூரிய கிரகணமும் நடைபெற்றிருக்கிறது. சிம்ம ராசியில் பூர நட்சத்திரத்தில் சந்திரன் பிரவேசிக்கும் 3ம் தேதி, நேர் எதிர் ராசியில் ராகுவின் சதய நட்சத்திரத்தில் சூரியன் இருக்க, சந்திர கிரகணம் வருகிறது.
9. கிரகண புண்ணிய கால தர்ப்பணம்
சந்திர கிரகண நேரம் மதியம் 03:20 மணி முதல் மாலை 06:47 மணி வரை நீடிக்கும். இதில் உச்சபட்ச கிரகண நேரமாக, மாலை 06:26 மணிக்கு முதல் மாலை 06:40 மணி வரை கிரகணம் இருக்கும். கிரகணம் முடியும் தறுவாயில் உள்ள கடைசி 20 நிமிடங்கள் இந்தியாவில் சில பகுதிகளில் தெரியும். சந்திரோதயம்: மாலை 06:26 மணிக்கு நிலவு உதிக்கும் போது, கிரகணத்தின் கடைசி கட்டத்தை நாம் தரிசிக்கலாம். கிரகண தோஷம் உள்ள நட்சத்திரங்கள் மகம் பூரம் உத்திரம் பரணி பூராடம். அன்றைக்கு பௌர்ணமி சிராத்தம் மறுநாள் செய்ய வேண்டும். மாலை 6:20க்கு மேல் கிரகண புண்ணிய கால தர்ப்பணம் செய்ய வேண்டும்.
10. கோயில்களில் நடை சாற்றப்படும்
சந்திர கிரகணம் காரணமாக காலை9 மணி முதல் மாலை ஏழரை வரை ஏழுமலையான் கோயில் நடை சாற்றப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மற்ற கோயில்களிலும் அப்படியே. அன்று மாசி மாதம் என்பதால் காலையிலேயே தீர்த்தவாரி முடிந்து, தீர்த்தவாரி இடத்திலேயே, மண்டகப்படி மண்டபங்களின் நடை சாற்றப்படும். பகல் காலங்களில் தரிசிக்க முடியாது. அன்று மாலை கிரகண பரிகார பூஜைகள் செய்த பின், வழக்கமான உற்சவங்கள் தொடங்கும். இந்த ஆண்டு மாசி மகத்தின் வித்தியாசமான நிலை என்பதை தெரிந்து கொண்டு, மாசிமக தீர்த்தவாரியின் போது நீராடுபவர்கள் அதிகாலையிலும், பிறகு கிரகண காலம் முடிந்து மறுபடி ஒருமுறையும் தீர்த்தமாட வேண்டும். கிரகண காலத்தில் ஜபம் முதலிய இறைவழிபாடுகள் செய்யலாம்.
11. ஒன்பதுகோள்களும் ஒரு ராசியில்
இந்த ஆண்டில் மட்டும் மாசி மக நாளில் ஏற்படும் வானியல் நிகழ்வு வேறு ஆண்டுகளில் இல்லாத அதிசய நிகழ்வு. வானத்தில் ஒன்பது கோள்களும் சிம்ம ராசியில் சம்பந்தப்பட்டு இருக்கிற அதிசய நிகழ்வு, இந்த ஆண்டு மாசி மகத்தின் போது அமைந்திருக்கிறது. தற்சமயம் கும்ப ராசியில் சூரியன், சனி, ராகு, புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய ஆறு கோள்கள் இருக்கின்றன. குரு ஒன்பதாம் பார்வையாக கும்ப ராசியைப் பார்ப்பதால் கும்ப ராசியோடு தொடர்பு ஏற்படுகிறது. வாக்கியக் கணிதப்படி சனிப்பெயர்ச்சி அடுத்த சில நாட்களில் நடைபெற இருக்கிறது. திருக்கணிதப்படி குருவினுடைய பூரட்டாதி நட்சத்திரத்தில்தான் இருக்கிறது. சந்திரன், கேது சிம்ம ராசியில் இருந்து கும்ப ராசியைப் பார்க்கிறார்கள். இப்படி நவக்கோள்களும் கும்ப ராசியோடு தொடர்பு கொண்ட நாளில் (3.3.2026) மாசி மகம் நடப்பது சாதாரணமான நிகழ்வு அல்ல. அது இந்த ஆண்டுக்குரிய சிறப்பு.
12. கருட புராணத்தி ல்மாசி மகம்
கடல் நீராட்டம் என்பது எல்லா நாட்களிலும் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் பாவம் என்று கருட புராணம் சொல்லுகின்றது. ஆனால், கடலில் மக்கள் நீராடுவதற்கு சில நாட்களை கருடபுராணம் அனுமதிக்கிறது. அதில் மிக உயர்வான நாளாகவும், அவசியம் கடலில் நீராடி குற்றங்களைப் போக்கிக் கொள்ள வேண்டிய நாளாகவும் மாசி மகத்தைக் குறிப்பிடுகிறது. அமாவாசை முதலிய நாட்களிலும் இது அனுமதிக்கப்பட்டாலும், மாசி மகத்திற்கு உள்ள சிறப்பு வேறு நாட்களுக்கு இல்லை. காரணம், இறைவனும் அதே கடற்கரைக்கு வந்து தீர்த்தமாடும் நாள் மாசி மக நாள் அல்லவா! அவர் தீர்த்தமாடிய தீர்த்தத்தில் மக்கள் தீர்க்கின்ற வாய்ப்பைப் பெறும் நாள் அல்லவா!
13. ஏன் நீராட வேண்டும்?
பழங்காலம் தொட்டு மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வின் ஒரு பகுதியாக மாசி மகத் திருவிழாவை நடத்தி வந்தனர். வழிபாட்டுக்கு முக்கியம் தூய்மை. தூய்மைக்கு முக்கியம் நீராடுதல். நீராடுதல் இரண்டு வகைப்படும். ஒன்று அகநீராட்டம். இன்னொன்று புறநீராட்டம். புறத் தூய்மை தண்ணீரில் குளிப்பதால் உண்டாகும். அகத்தூய்மை. உண்மையை பேசுவதாலும், நல்ல வார்த்தைகளைப் பேசுவதாலும், நல்ல சிந்தனையை வளர்த்துக் கொள்வதாலும், இறைவழிபாட்டின் மூலமும் உண்டாகும். அகம், புறம் தூய்மையாகி விட்டால், நம்முடைய பாவங்கள் தீயினில் பட்ட தூசாக மாறிவிடும். இந்த அகத்தூய்மையும் புறத்தூய்மையும் பெறுவதற்காகத்தான் மாசி மகத்திலே நீராடி பகவானை வணங்குகின்றோம். ஆயிரக்கணக்கான மக்கள் அன்று இறை வழிபாடு செய்து நீராடுவதால், மாபெரும் கூட்டு வழிபாட்டின் சக்தியும் அன்றைக்குக் கிடைத்து விடுகிறது.
14. சங்க இலக்கியத்தில் மாசி மகம்
சங்ககாலத்தில் இறை திருமேனிகளை நீர்நிலைகளில் நீராட்டும் வழக்கத்தின் தொடர்ச்சியாக நீரணி விழவு என்ற பெயரில் கொண்டாடப்பட்டதே மாசிமகமாகும். இது சங்க இலக்கியங்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியிலும், சிலப்பதிகாரத்திலும் இவ்விழா கொண்டாடியது பற்றிய விரிவான தகவல்கள் உள்ளன…! புற நானூற்றுப் பாடலில் சங்க காலப் பாண்டிய மன்னன் முந்நீர் விழாவின் நெடியோன் என்று அழைக்கப்படுகிறான். முந்நீர் என்னும் சொல் கடலைக் குறிக்கும். ஏழு நாட்கள் கொண்டாடப்பட்ட இவ்விழாவின் ஏழாவது நாள் இறை திருமேனிகளை நீராட்டியுள்ளனர். இப்பண்டிகையை “மாசிக் கடலாட்டு கண்டான்’’ என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார். மேலும் முதலாம் ராஜராஜன், வரகுண பாண்டியன், ஆய் மன்னர்கள், ராஜேந்திரச் சோழனின் காலத்திலும் குலோத்துங்கச் சோழனின் காலத்தில் மாசிக் கடலாடி வீற்றிருக்க மண்டபம் எடுத்த செய்தியும் உள்ளது! திருவரங்கத்தில் கி.பி.1531-ஐ சார்ந்த விஜயநகர் காலக் கல்வெட்டின் மூலமாக உறையூரில் நடைபெற்ற மாசிமக விழாபற்றிய செய்தியை அறியமுடிகிறது.தமிழகத்தின் முக்கியமான ஆலயங்களில் மாசி மகம்
15. கும்பகோணத்தில் மாசிமகம் – பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தவாரி
மாசி மகம் என்றால் உடனே நம் நினைவுக்கு வருவது கும்பகோணம்தான். நீர் கிரகமான சந்திரன் நெருப்பு ராசியான சிம்ம ராசியில் இருப்பது போல, கும்பகோணத்தின் அக்னி மூலையில், நீர் நிறைந்த மகாமக குளம் அமைந்திருக்கிறது. மக நீராடலுக்கென்றே அமைந்த ஒரே குளம் உலகத்தில் இதுதான். சிவபெருமான் அம்பால் அடித்து அமுதக் குடத்தை உடைத்தபோது, அதிலிருந்து வெளிவந்த அமுதம் நீராகப் பெருகி, மகாமக குளமாக உருவானதாக புராண வரலாறு. மாசி மகம் அன்று நீராடுவதால் சர்வ தோஷங்களும் நீங்கும். மாசி மகம் அன்று கும்பகோணத்தில் உள்ள காசி விஸ்வநாதர், கும்பேஸ்வரர், நாகேஸ்வரர் சோமேஸ்வரர், கௌதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், பாணபுரீஸ்வரர், கம்பட்ட விஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர், கோடீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், அமிர்த கலசநாதர் என எல்லா சிவாலய உற்சவமூர்த்திகளும் மாசி மக குளத்திற்கு வந்து தீர்த்தவாரி நடத்துகின்றனர். மாசி மகத்தில் இந்த மகாமக குளத்தில் கும்பகோணத்தை சுற்றியுள்ள சைவ ஆலயங்களில் இருந்து மூர்த்திகள் வந்து தீர்த்தவாரி கண்டருள, வைணவக் கோயில்களில் இருந்து புறப்படும் மூர்த்திகள் காவிரிக்கரையில் தீர்த்தவாரி கண்டருளும்.கும்பகோணத்தில் உள்ள பெருமாளுக்கு ஆரா அமுதப் பெருமாள் என்று பெயர். மாசி மகத்தில் தீர்த்தமாடி வழிபாடு நடத்துவதன் மூலம் அமுதம் கிடைத்தது போல, அந்த ஆராவமுதப் பெருமாள் கிடைப்பார். கடலைக் கடைந்த பொழுது பெருமாளுக்கு மகாலட்சுமி தாயார் கிடைத்தாள். மகாலட்சுமிக்கு பெருமாள் கிடைத்தார். ஆனால், நமக்கு மாசி மகத்தில் பெருமாள் தீர்த்தமாடிய தீர்த்தத்தில் நீராடும் பொழுது மகாலட்சுமியோடு இணைந்த பெருமாள் கிடைப்பார். கும்பகோணத்தில் உள்ள பெருமாள் ஆலயங்களின் உற்சவமூர்த்திகளுக்கு பொற்றாமரை குளத்திலும், காவிரி
ஆற்றிலும் தீர்த்தவாரி நடைபெறும்.
16. விருத்தாசலத்தில் மாசிமகம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோவிலில் மாசி மகப் பெருவிழா மிக விமரிசையாக நடைபெறும் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருத்தலம், ஆன்மிக மரபில் “காசியைவிட வீசம் அதிகம்” என்று போற்றப் படுகிறது. பஞ்ச தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு ஐந்து கோபுரங்கள், ஐந்து தேர்கள், ஐந்து நந்திகள், ஐந்து பிரகாரங்கள் மற்றும் ஐந்து கொடி மரங்கள் என தனித்துவமான அமைப்பைக் கொண்டுள்ளது. மாசி மகத் திருவிழா இக்கோயிலின் மிக முக்கியமான விழாவாகும். சிவபெருமானின் தீவிர பக்தரான விபசித்து முனிவருக்கு மாசி மக நன்னாளில் இறைவன் நேரில் காட்சியளித்த நிகழ்வு இவ்விழாவின் பெருமையை எடுத்துரைக்கிறது. இதனை முன்னிட்டு மணிமுத்தாறு நதிக்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வது தொன்றுதொட்டு வரும் ஐதீகமாகும்.
17. மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் மாசிமகம்
தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களுள், தேவாரத் தலமான மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் மிகவும் முக்கியமானது. வேண்டுவோருக்கு வேண்டியதைத் தரும் தேவலோக மரமான கற்பகத் தருவைப் போன்று, தன் பக்தர்கள் தன்னிடம் வேண்டும் வரங்களை எல்லாம் தருவதால், அம்பிகைக்கு ஸ்ரீகற்பகாம்பாள் என்று திருநாமம். தேவாரத்தில் திருஞானசம்பந்தர் சென்னை கபாலீசுவரரின் மாசிமகக் கடலாடு விழாவைப் பற்றிக் கூறுகிறார். கடலும் ஆறும் சங்கமிக்கும் சங்கமத்தில் நீராடுதல், பெரும் புண்ணியத்தை தரும் என்று குறிப்பிடுகிறது மாசி பௌர்ணமி தினத்தில், கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதிகளில் உலா வந்து, மணிக்கூண்டு அருகில் உள்ள மெரினா கடற்கரைக்கு பல்லக்கில் எழுந்தருளி, சிறப்பு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். தீர்த்தவாரி மற்றும் கடலாட்டு நிகழ்ச்சி அற்புதமாக இருக்கும். மாசி மகத்தன்று திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள் கடலாட்டு (கடலில் தீர்த்தவாரி) நிகழ்ச்சிக்காக கடற்கரைக்கு எழுந்தருள்வார். காலையில் சிறப்பு கருட சேவை புறப்பாடு நடைபெறும்.
18. ராமேஸ்வரத்தில் மாசிமகம்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள அக்னி தீர்த்தம். ராவணனை வென்ற பின் சீதை தனது கற்புத்தன்மையை நிரூபிக்க தீக்குளித்தார். இதில் அக்னி தேவன் மீது ஏற்பட்ட தோஷத்தை போக்க, சிவபெருமானின் ஆலோசனைப்படி அக்னி தேவன் இந்த கடலில் நீராடினார். எனவே இது `அக்னி தீர்த்தம்’ என அழைக்கப் படுகிறது. ராமேஸ்வரத்தில் உள்ள 64 தீர்த்தங்களில் மிகவும் முக்கியமானது. ராமநாதசுவாமி கோயிலுக்குள் இருக்கும் 22 தீர்த்தங்களில் குளிக்கும் முன், பக்தர்கள் இந்த அக்னி தீர்த்தக் கடலில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மாசி மகம் அன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடுவது கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடுவதற்கு சமமான பலனைத் தரும் எனச் சொல்லப்படுகிறது. மக நட்சத்திரம் பித்ருக்களுக்கு (முன்னோர்கள்) உகந்தது என்பதால், மாசி மகத்தன்று ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம். ராமேஸ்வரம் அருகிலுள்ள ஜடாமகுட தீர்த்தேஸ்வரர் கோயிலில் மாசி மகம் அன்று நீராடுவது சிறப்பானது.
19. திருச்செந்தூரில் மாசிமகம்
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா 12 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். கொடியேற்றத்துடன் தொடங்கி, தேரோட்டம், சிவப்பு சாத்தி, பச்சை சாத்தி மற்றும் மாசிமகக் கடலாடு தீர்த்தத்துடன் நிறைவு பெறும். மாசி மகம் நட்சத்திரத்தன்று சுவாமி சண்முகர், வள்ளி – தெய்வானையுடன் மாசிமகப் பெளர்ணமியன்று கடலில் தீர்த்தவாரி செய்வார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர். இந்த ஆண்டு மாசி மகம் மற்றும் தெப்ப உற்சவம்: மார்ச் 3, 2026 அன்று நடைபெறுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மாதத்தில் நடைபெறும் மாசி மண்டல உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது ஒரு மாத காலத்திற்கு மேல் நடைபெறும் முக்கிய திருவிழாவாகும். இத்திருவிழாவில் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் மாசி வீதிகளில் உலா வருவர். கொடியேற்றத்துடன் தொடங்கி, பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா வருவது மற்றும் சிறப்பு யாகங்கள் நடைபெறுவது வழக்கம்.
20. காஞ்சி வரதர்,ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் மாசி மக தீர்த்தவாரி
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மாசி மகத் தீர்த்தவாரி விமரிசையாக நடைபெறும். இந்த நாளில் பெருமாள் அனந்தசரஸ் புஷ்கரணியில். தீர்த்தவாரி கண்டருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இக்குளம் மிகவும் புனிதமானது, தேவாமிர்தத்தால் நிரம்பியது என்றும் புராணம் கூறுகிறது. மாசி மகத்தையொட்டி, ஏகாம்பரநாதரும் அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்கள் புடைசூழ காஞ்சிபுரம் வீதிகளில் பவனி வருவார்கள். காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளி சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கம்பா நதி தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறும். ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள தீர்த்தமே கம்பா நதியாகும். முற்காலத்தில் ஒரு நதியாக ஓடிய கம்பா நதி தற்போது குளமாகக் காட்சியளிக்கிறது. இத்தலத்தின் ஸ்தல விருட்சம் மாமரம். காமகோட்டமே காமாட்சி அம்பாள் திருக்கோயிலாகும்.
21. பூம்புகாரில் மாசிமகம்
பூம்புகாரில் மாசிமகத் திருவிழா கடலாடு தீர்த்தவாரியுடன் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. காவிரியாறு கடலோடு சங்கமிக்கும் இந்நாளில், சப்தகன்னியர் வழிபாடும், தீர்த்தவாரி நிகழ்வும் சிறப்பாக நடைபெறும். பூம்புகாருக்கு அருகில் காவிரி நதி சங்கமிக்கும் சங்கமுகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, சிவனையும் சப்தகன்னியர் களையும் வழிபடுவர். மக்கள் ஒன்றாகக் கூடி கடலில் இறைவன் தீர்த்தவாரி கண்டருளிய நீரில் தாங்களும் நீராடுவது பாவங்களைப் போக்கி உன்னதமான வாழ்வைத் தரும், என்பதை சிலப்பதிகாரம், “கடலோடு காவிரி சென்று அலைக்கும் மூன்றில் மடல் அவிழ் நெய்தல் காணம் தடம் உரை’’ என்று தெரிவிக்கிறது.
22. மகாபலிபுரத்தில் மாசிமகம்
மாமல்லபுரம் அர்த்த சேது என்று அழைக்கப்படுகிறது தமிழகம் முழுவதும் உள்ள இருளர் இன மக்கள், தங்களின் குலதெய்வமான `கன்னியம்மன்’ அல்லது `ஏழு கன்னிமார்களை’ வழிபட மகாபலிபுரம் கடற்கரையில் கூடுகின்றனர். கடற்கரையில் தற்காலிகக் குடில்கள் அமைத்து 3 முதல் 4 நாள்கள் தங்கி, விசேஷ பூஜைகள், காது குத்துதல், மொட்டை அடித்தல் மற்றும் திருமணம் போன்ற நிகழ்வுகளைச் செய்கின்றனர். மாசிமகத் திருவிழாவின் இறுதி நாளில், பல்லாயிரக்கணக்கான இருளர் மக்கள் கடலில் நீராடி, தங்களைப் புனிதப்படுத்திக் கொள்கின்றனர். இருளர் இன மக்களின் முக்கிய வழிபாடாக இருந்தாலும், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் இவர்களின் கலாச்சாரத்தைக் காணவும், கடற்கரையில் நடைபெறும் சடங்குகளைப் பார்க்கவும் குவிவர். இத்தலத்தில் கடல் நீராடி ஸ்தல சயனப் பெருமாளையும் பிராட்டியையும் தரிசிப்பவர்களுக்கு திருமண பாக்கியம், நன்மக்கட்பேறு போன்ற பலன்கள் கிட்டும். மாசி மகத்தை ஒட்டி இங்கு தீர்த்தவாரி நடைபெறும்.
23. கன்னியாகுமரியில் ஆரம்பித்து சென்னை வரை
தமிழ்நாட்டின் கிழக்கு எல்லையாக அமைந்துள்ள கடல் வங்காள விரிகுடாக் கடல். இந்தக் கடலில் கன்னியாகுமரியில் ஆரம்பித்து சென்னை வரை கடற்கரையை ஒட்டி எத்தனை ஆலயங்கள் உள்ளதோ அத்தனை ஆலய உற்சவ இறை உருவங்கள், வங்காளக் கடலுக்கு வந்து தீர்த்தவாரி கண்டருள் வார்கள். சில கோயில்களில் சுவாமி புறப்பட்டு கடலுக்கு வந்து தீர்த்தவாரி முடிந்து திரும்பவும் ஆஸ்தானம் செல்ல ஒரு மாதம்கூட ஆகலாம். உதாரணமாக ஸ்ரீமுஷ்ணம் வராகப்பெருமாள், 60 கி,மீட்டருக்கு மேல் பயணம் செய்து கிள்ளைக்கு வந்து தீர்த்தவாரி கண்டருளி, வழியெல்லாம் பல்வேறு ஊர்களில் மண்டகப்படி கண்டு திரும்புவார். திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கிட்டத்தட்ட நூறு கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்து கடலூர் தேவனாம்பட்டினத்தில் தீர்த்தவாரி கண்டருள்வார். அவரோடு பாடலீஸ்வரரும், திருவஹீந்திரபுரம் தேவநாதப்பெருமாளும் தீர்த்தவாரி கண்டருள் வார்கள். திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் திருமலைராயன் ஆறு சங்கமிக்கும் திருமலைராயன் பட்டினத்தில் (காரைக்கால் அருகில்) தீர்த்தவாரி கண்டருள்வார். ஒவ்வொரு கடற்கரையிலும் பெருமாள் மூர்த்தங்களும் சிவாலய மூர்த்தங்களும் அம்மன் உற்சவ மூர்த்திகளும் இணைந்து ஒரே இடத்தில் தீர்த்தவாரி காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
24. திருக்கோஷ்டியூர் தெப்பம்
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலின் மாசித் தெப்பத் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இந்தப் பெருவிழா 10 நாட்கள் நடைபெறும். இங்கே மாசிமக கிணறு இருக்கிறது. அங்கே தீர்த்தவாரி நடைபெறும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி சனிக் கிழமை மாசிமக உற்சவம் தொடங்கியது. 22-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. ஸ்வாமி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருள்வார். மார்ச் மாதம் மூன்றாம் தேதி அன்று தெப்பத் திருவிழா நடைபெறும் தெப்பக்குளத்தின் நடுவே இருக்கும் நீராழி மண்டபத்தைச் சுற்றி தெப்பத்தில் பெருமாள் வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். தெப்பத் திருவிழாவின் போது, தெப்பக்குளத்தைச் சுற்றி பெண்கள் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம்.
25. எப்படி வந்தது மாசி மகம்?
நீருக்கு அதிபதி வருணன் ஒரு முறை பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு நலிந்தார். வருணன் உடல் கட்டப்பட்ட நிலையில் கடலில் வீசப்பட்டார். மழைக் கடவுள் பலமின்றி இருந்ததால் உலகம் வாடியது. சிவனை நோக்கி தவமிருந்தார். அனைத்து உயிர்களும் வருணபகவானை விடுவிக்கும்படி ஈசனிடம் வேண்டினர். மாசி மக நட்சத்திரத்தில் நீராடினால் தோஷம் தீரும் என சிவபெருமான் கூறினார். தண்ணீர் கடவுளான வருணன் மாசு தீர, மாசி மகம், பௌர்ணமி நாளில், நீராடினார். இறைவனை வழிபட்டு, குற்றம் நீங்கினார். தூய்மை அடைந்த வருண பகவான் பழைய நிலையை அடைந்தார். “நான் பிரம்மகத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு கடலில் கிடந்த போது நீருக்குள் இருந்தபடியே உங்களை வணங்கினேன். அதன் பயனாக எனக்கு விடுதலை கிடைத்தது. மாசி மகத்தன்று புண்ணிய தீர்த்தங்களின் மூழ்கி நீராடி இறைவனை வழிபடும் அனைவருக்கும் பாவங்களையும் பிறவி துன்பத்தையும் நீக்கி அருள் செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார். மாசி மகத்தன்று நாமும் நீராடி இறைவனை வணங்கினால் நம்முடைய மாசுகளும் தீரும்.
26. என்ன பலன்?
மாசிமகத் திருநாள் அன்று இறைவனே நீர் நிலைகளில் வந்து நீராடுகின்றார். அப்பொழுது அவருடைய திருவடியை நினைத்து நாமும் அதே நீரில் நீராடி னால் பிறவிப் பெருங்கடலை நீந்திவிடலாம்.
“மாக ஸ்நாநைர் விபந் நாசா: மாக ஸ்நாநைர் அகஷயா:
ஸர்வ யஜ் ஞாதி கோ மாக ஸர்வ தான பலப்ரத:’’
மாசிமகத்தன்று நீராடுவதால் ஆபத்துக்கள் போகும். பாவங்கள் அழியும். எல்லாவிதமான யாகங்கள் செய்த பயன்களும் ஏற்படும். பற்பல தானங்கள் செய்த பலன்கள் கிட்டும் என்பது ஸ்லோகத்தின் பொருள்.
27. இத்தனைச் சிறப்பா?
மாசி மகம் தீர்த்தவாரி எனும் நீராட்டம் தவிர வேறு பல சிறப்புகளும் உடைய நாள்.*வராகப் பெருமாள், இரணியனை அழித்து பூமியை உத்தாரணம் செய்த தினம் மாசி மகம். *முருகப் பெருமான், சுவாமிமலையில் பிரணவப் பொருளை தந்தைக்கு உபதேசம் செய்த நாள் மாசி மகம். *கால தேவதையான எமன் அவதரித்த நாள் மாசி மகம். எனவே மாசி மகம் அன்று கடலில் நீராடி அல்லது சுவாமி தீர்த்தவாரி கண்டருளும் ஆறுகளிலோ குளங்களிலோ நீராடி, அதன் கரைகளில், பிதுர் தர்ப்பணம் செய்வதன் மூலமாக முன்னோர்களின் பூரணமான ஆசியும் கிடைக்கும்*எல்லா மாதத்திலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நாளில்தான் உமா தேவியார் தட்சன் என்பவரின் மகளாக அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அன்று பல ஆலயங்களில் திருக்கல்யாண உற்சவங்களும் தெப்ப உற்சவமும் நடை பெறுகிறது.
28. குல தெய்வ வழிபாடு
திருமால் ஆலயங்களிலும், சிவாலயங்களிலும், அம்மன் கோயில்களிலும், முருகன் கோயில்களிலும், மாசிமக தீர்த்தவாரி சிறப்பாக நடைபெறும். கிராம மக்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி தாங்கள் வழிபடும் தெய்வத்தை, வாகனங்களில் வைத்து, அந்த வாகனங்களோடு இவர்களும் ஒன்றாக அருகாமையில் உள்ள கடற்கரைக்கோ, தீர்த்தவாரி நடைபெறும் இடத்திற்குச் சென்று, (குளம் அல்லது ஆற்றங்கரை) மகிழ்ச்சியுடன், இறைவன் நீராடிய தீர்த்தத்தில் நீராடி மகிழ்வார்கள். எனவே, மக்களை ஒன்றாகக் கூட்டும் சமூகப் பெருவிழா என்று மாசிமகத்தைச் சொல்லலாம். இந்நாளில் மாணவர்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களை, குல தெய்வங்களை வணங்கி பாடங்களை படித்தால் அறிவு விருத்தியாகும். மந்திர உபதேசம் பெறுவதும் மிகவும் சிறப்பாகும். கல்வி தொடர்பான செயல்களை தொடங்க வேண்டும் என்றால் மாசி மகத்தில் தொடங்குவது சிறப்பு.
29. எப்படி விரதம் இருப்பது?
மாசிமகம் அன்று ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் எத்தனை ஆலயங்கள் உண்டோ, அதில் பெரும்பாலான ஆலயங்களில் இருந்து, முருகனோ, அம்மனோ புறப்பட்டு தங்களுக்கு அருகாமையில் இருக்கக் கூடிய கடற்கரையில் தீர்த்தமாடுவது கண்கொள்ளாக் காட்சியாகும். மாசி மகத்தன்று முறையாக விரதம் இருந்து தீர்த்தவாரி உற்சவத்தில் கலந்து கொள்ள வேண்டும். விரதம் இருப்பதோடு, குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வங்களையும் வணங்கி நம்மால் இயன்ற தானங்கள் ஏழைகளுக்குச் செய்வது பூரண பலனைத்தரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாசி மக விரதத்தை அனுஷ்டித்தால், குழந்தை பேறு உண்டாகும். புனிதமான நீர் நிலையில் நீராடி, எழுந்ததும், நவ நதிகளைப் போல ஒன்பது பெண்களைக் கருதி, அவர்களுக்கு தாம்பூலம், பழம், தட்சனை, தேங்காய், குங்குமம், ரவிக்கைத் துணி, கொடுப்பது சிறப்பான பலனைத் தரும்.
30. எப்படித் தீர்த்தமாடுவது?
மாசிமகம் அன்று கடல் அல்லது புண்ணிய நதிகளில் புனித நீராடும் போது எக்காரணத்தை முன்னிட்டும் ஒரே ஆடையை மட்டும் உடுத்திக் கொண்டு நீராடக்கூடாது. தீர்த்தமாடுவதற்கு முன் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி மூன்று முறை சிறிதளவு தீர்த்தத்தை உள்ளங்கையில் எடுத்து தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். ஈர ஆடையுடன் நீராடக்கூடாது. இரவில் நீராடக்கூடாது. ஒரு முறை மூழ்கி எழுந்தால் பாவங்கள் போகும். இரண்டு முறை மூழ்கினால் சொர்க்கத்தில் வாழும் பேறு கிடைக்கும். மூன்று முறை மூழ்கி எழுந்தால் ஈடு இணையற்ற புண்ணிய பலன் கிடைக்கும். அன்று முழுவதும் சிவ பக்தர்கள் சிவனுடைய ஸ்தோத்திரங்களையும், விஷ்ணு பக்தர்கள் விஷ்ணுவினுடைய புராணங்களையும் வாசிக்க வேண்டும். குறிப்பாக, மாசி மக புராணம் வாசிப்பது மகத்தான பலனைத் தரும்!
