×

பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

சேலம், பிப்.28:சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் 2025-2026ம் கல்வியாண்டிற்கான பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி வரை நடக்கிறது. அதேபோல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 11ம்தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடக்கிறது. பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசு தேர்வுகள் இயக்ககம் முழுமையாக ஈடுபட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை பொறுத்த வரை, நடப்பாண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வை 36 ஆயிரத்து 713 பள்ளி மாணவர்களும், 829 தனித்தேர்வர்களும் என மொத்தம் 37 ஆயிரத்து 542 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 153 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 40 ஆயிரத்து 787 மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 188 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வை முன்னிட்டு, அனைத்து தேர்வு மையங்களிலும் தூய்மை பணியாளர்கள் மூலம் வகுப்பறைகளை சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி, நேற்று சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் பதிவு எண்களை மேசையில் ஒட்டும் பணி நடந்தது. இதில் பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பதிவு எண்களை ஒட்டினர். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார் செய்யப்பட்டு வருவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Tags : Salem ,Tamil Nadu ,
× RELATED துணை குடியரசு தலைவருக்கு அமைச்சர், எம்பிக்கள் வரவேற்பு