சேலம், ஏப். 13: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளது. தற்போது மூத்த வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகளின் தபால் வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் என 799 பேர் வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வாக்களிக்க முடியாதவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கான தபால் வாக்குப்பதிவு 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. 15 நடமாடும் அஞ்சல் வாக்கு பெட்டியுடன் மண்டல அலுவலர்கள் வாகனத்தின் மூலம் அவர்களது வீட்டிற்கே சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அவர்களுக்கு பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய காலவரும் உடன் சென்றனர். இப்பணியை சேலம் தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோவன் நெத்திமேடு பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது மூத்த வாக்காளர்களிடம் நேரில் தபால் வாக்கு பெறுகின்றனரா என ஆய்வு செய்தார். இந்த வாக்குப்பதிவினை வேட்பாளரோ அல்லது முகவர்களோ கண்காணிக்க விரும்பினால், முன்கூட்டியே தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
