* பல லட்சம் பெற்று கொண்டு மிரட்டுகிறார்
* கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை
* வீடியோ வெளியிட்டு பரபரப்பு குற்றச்சாட்டு
மதுரை: பல லட்சம் வாங்கி மாவட்டச் செயலாளர் டார்ச்சர் செய்ததாக கூறி, தவெக மகளிரணி நிர்வாகி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் கல்லாணை, கட்சியிலுள்ள பெண்களை உருவ கேலி செய்வதாகக் கூறி, கடந்த மாதம் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் தரப்பிலும் புகார் கொடுத்தனர். தற்போது தவெக மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் தங்கப்பாண்டி மீது குற்றம்சாட்டி மகளிரணி நிர்வாகி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் தவெக மகளிரணி நிர்வாகி ஷர்மிளா. கட்சி துவங்கியது முதல் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதிகளவு மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தவெக தெற்கு மாவட்டச் செயலாளர் தங்கப்பாண்டி மீது புகார் கூறி பேசும் வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ஷர்மிளா பேசியிருப்பதாவது: நான் தவெகவில் மதுரை மாவட்ட மகளிரணி அமைப்பாளராக இருந்தேன். தற்போது அந்த பதவியை முத்துலட்சுமிக்கு, தவெக தெற்கு மாவட்டச் செயலாளர் தங்கப்பாண்டி கொடுத்துள்ளார். சாதி பாகுபாடு காரணமாகவும், என்னைவிட அதிக பணம் கொடுத்ததால் அவருக்கு பதவியை கொடுத்துள்ளார். கட்சியில் சாதி பலம், பண வசதி உள்ளவர்களை அதிகளவில் சேருங்கள் என தங்கப்பாண்டி அடிக்கடி எங்களிடம் கூறுவார். அப்போது தான் நீங்களும் வளரமுடியும். நானும் வளர்வேன் என்பார். அதனால் நானும் பணத்தை வாங்கி கொடுத்து எனது 2 நண்பர்களை சேர்த்தேன். அதன் பின் அவர்களிடமும், என்னிடமும் பெருந்தொகை பெற்றுக்கொண்டார்.
பின்னர், ‘எனக்கு கடன் இருக்கிறது. அதனால் மாதந்தோறும் நகைகளை விற்றாவது பணத்தை கொடுக்க வேண்டும்’ என டார்ச்சர் செய்து வந்தார். அவர் ரவுடி என்பதால் நானும் பயத்தில் பணம் கொடுத்துவிட்டு, திருப்பி கேட்காமல் இருந்தேன். அதன் பின்னர் ஐடி கம்பெனி ஒன்றில் முதலீடு செய்தால் பணம் கிடைக்கும் என கட்டாயப்படுத்தினார். இதனால், என் அம்மாவின் நில ஆவணத்தை அடகு வைத்து ரூ.16 லட்சம் கொடுத்தேன். அதையும் திருப்பி தரவில்லை. முதலீடு செய்த பணமும் வரவில்லை. இதனால் நான் வட்டி கட்டி வருகிறேன். ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் தாங்க முடியாமல் போனது. இதனால் தற்கொலை முயற்சி செய்தேன். நல் வாய்ப்பாக மருத்துவர்கள் என்னை காப்பாற்றினார்கள்.
நான் இழந்த எங்கள் நிலம், பணத்தை மீட்டு தாருங்கள். இல்லை என்றால் நான் மீண்டும் தற்கொலை செய்து கொள்வேன். இதுபோக மாவட்டச் செயலாளர் மகனுக்கு புதிய ஐபோன் வாங்கி கொடுத்துள்ளேன். பணமும் கொடுத்துள்ளேன். இதற்கும் தற்போது வரை வட்டி கட்டிக்கொண்டு வருகிறேன். மாவட்டச் செயலாளர் தங்கப்பாண்டியுடன் இருந்தவர்கள் தற்போது இல்லை. ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் கொடுப்பவர்களை மட்டும் தான் தன்னை சுற்றி வைத்துக்கொண்டு பதவிகளை கொடுக்கிறார். தவெகவும் ஊழல் கட்சியாக மாறக்கூடாது என்பதற்காக கட்சி தலைமையிடம் புகார் தெரிவித்தால் என் மீதே புகார் தெரிவிக்கிறாயா என கூறி அறைக்குள் 10 பேரை வைத்துக் கொண்டு என்னை மிரட்டினர்.
அப்போது நான் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். கட்சிக்கு கெட்டபெயர் வேண்டாம் என்று நினைத்தேன். மாவட்டச் செயலாளரால் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலை உள்ளது. இதனால் எனக்கும், எனது உறவினருக்கும் ஏதேனும் நடந்தால் அதற்கு மாவட்டச் செயலாளர் தங்கப்பாண்டி, பாத்திமா, யோகானந்தன், சஞ்சய் இவர்கள் தான் காரணம். இவ்வாறு கூறினார். மதுரையில் தவெக நிர்வாகிகள் கட்சியினரிடம் குறிப்பாக பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொள்வது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
