*2வது கணவருடன் தாய் கைது
திருமலை : சந்தோஷமாக இருக்க இடையூறாக இருந்த இரண்டரை வயது மகளை அடித்துக்கொலை செய்த தாய், தனது 2வது கணவருடன் கைது செய்யப்பட்டார்.ஆந்திர மாநிலம், திருப்பதி ஆட்டோ நகரில் உள்ள ரெட்டி காலனியை சேர்ந்தவர் ஆஷலதா(19). இவருக்கும், ரேணிகுண்டாவை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இவர்களது இரண்டரை வயது மகள் துர்கா. குழந்தை பிறந்த சில நாட்களில் ஆஷலதாவுக்கும், ராஜேஷூக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒன்றரை ஆண்டுக்கு முன் ஆஷலதா, மகள் துர்காவை விட்டு விட்டு ராஜேஷ் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனியாக வசிக்கிறாராம்.
இதற்கிடையில் இன்ஸ்டாகிராம் மூலம் ஆஷலதாவுக்கு, ஏர்பேடு அடுத்த சென்னம்பள்ளியை சேர்ந்த ரெட்டி குமாருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. பெற்றோர் எதிர்ப்பை மீறி 7 மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் திருப்பதியில் உள்ள தெலுங்கு நகர், போஸ்டல் காலனியில், வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
சில நாட்களுக்கு பிறகு ரெட்டிகுமார், தனது வீட்டிற்கு ஆஷலதாவை அழைத்து சென்றார். ஆனால் அவரது பெற்றோர், ஆஷலதாவையும் அவரது குழந்தையையும் ஏற்க மறுத்தனர். இதனால் ரெட்டிகுமார், ‘குழந்தை துர்கா இல்லாவிட்டால், நம்மை வீட்டில் சேர்த்து கொள்வார்கள். நாம் சந்தோஷமாக வாழலாம். எனவே குழந்தையை கொன்றுவிடு’ என அடிக்கடி கூறியுள்ளார்.
அதன்படி ஆஷலதா கடந்த 19ம் தேதி துர்காவின் தலையில் கட்டையால் தாக்கி, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். சடலத்தை 2வது கணவர் ரெட்டிகுமார், அவரது நண்பர் ராமு உதவியுடன், சொர்ணமுகி ஆற்றில் புதைத்துள்ளனர். இதற்கிடையில் குழந்தை துர்கா குறித்து ஆஷலதாவின் தாய் நாகரத்தினம்மா, மகளிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லையாம்.
இதனால் சந்தேகம் அடைந்த அவர், போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் எஸ்பி சுப்பாராயுடு உத்தரவின்படி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் திருப்பதி சிந்தலச்சேனு சாலையில் உள்ள ராமதுளசி கல்யாண மண்டபம் அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பைக்கில் வந்த ஒரு பெண்ணும், ஆணும் பைக்கை விட்டு தப்பியோட முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் ஆஷலதா, ரெட்டிகுமார் என்பதும், குழந்தை துர்காவை கொன்று புதைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் தாசில்தார் முன்னிலையில் திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி மருத்துவர்களால் சடலம் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஷலதா, அவரது 2வது கணவர் ரெட்டிகுமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராமுவை தேடி வருகின்றனர். 2வது கணவருடன் சந்தோஷமாக இருக்க மகளை அதன் தாயே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
